புதுடெல்லி:

குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தில் பயனடையப் போகும் 1 கோடியே 20 லட்சம் பேருக்கு தனிப்பட்ட முறையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார்.


தேர்தலுக்கு முன்பு குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தை ராகுல் காந்தி அறிவித்தார். இது பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த திட்டத்தின் படி, ஏழை மற்றும் பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் என, ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் பரம ஏழைகள் யார் என்ற பட்டியில் காங்கிரஸ் கட்சியிடம் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பிய பாஜக, இது ஏமாற்று வேலை என்று குற்றஞ்சாட்டியது. இதற்கு பதிலடி தரும் வகையில் ராகுல் காந்தி அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டார்.

3-ம் கட்ட மற்றும் 4-ம் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ள இடங்களில் உள்ள ஏழைகள் பட்டியலை பல்வேறு தரவுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

இதன்படி, இந்த பகுதிகளுக்குள் வரும் 1 கோடியே 20 லட்சம் பரம ஏழைகளுக்கு ‘நியாய சந்தேஷ்’ என்ற தலைப்பிட்டு கடிதம் ஒன்றை தனிப்பட்ட முறையில் அனுப்பியுள்ளார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியபடி, 20% பரம ஏழைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதன்படி, 3 மற்றும் 4-ம் கட்ட தேர்தல் நடக்கும் இடங்களில் உள்ள பரம ஏழைகளுக்கு ராகுல் காந்தி கடிதம் எழுதியிருப்பதாகவும் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இந்தி மற்றும் மாநில மொழிகளில் இந்த கடிதம் அமைந்துள்ளது.  இந்த கடிதத்தின் மூலம், பயனாளிகளை எப்படி தேர்வு செய்வீர்கள் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பிரச்சினை என்னவென்றால், பெரும்பாலான பொருளாதார நிபுணர்களுக்கு தேர்தல் வியூகம் தெரியவில்லை. பெரும்பாலான அரசியல்வாதிகளுக்கு பொருளாதாரம் தெரியவில்லை” என காங்கிரஸ் கட்சியின் தரவு ஆய்வு துறையின் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார்.

குடிசை வீடுகள், அந்த வீடுகளில் உள்ள டிவி, இரு சக்கர வாகனங்கள், போன் மற்றும் விவசாயத்தை சார்ந்தவர்கள், நிலமற்ற தொழிலாளர்கள் ஆகிய அடிப்படையில் பரம ஏழைகள் அடையாளம் காணப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே ராகுல் காந்தி நேரடியாக அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

1 கோடியே 20 லட்சம் பேருக்கு ராகுல்காந்தி எழுதிய கடிதத்தில், 15 முதல் 20 தொழிலதிபர்களுக்கு மட்டுமே கடந்த 5 ஆண்டுகளாக மோடி பணியாற்றியது என்றும், பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி பாதிப்பு குறித்தும் விளக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்ச வருவாய் உறுதித் திட்டத்தை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றுவோம் என்றும் அதில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.