டெல்லி: மக்களவை தேர்தலையொட்டி,  3வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் இன்று வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது.  12 மாநிலங்களைச் சேர்ந்த 94 தொகுதிகளில் இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்ககிறது.

தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடைகிறது. அதற்குள் தேர்தல் நடைபெற்று 18வது மக்களவை அமைக்கப்பட வேண்டும்.  இதனால் 18-வது மக்களவைக்கான தேர்தல் தேதிகள் குறித்த அறிவிப்பை  மார்ச் 16ந்தேதி மாலை  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி ஏற்கனவே 2 கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து அனல்பறக்கும் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், 3ம் கட்ட  தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. 3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் நடைபெற உடளள  94 தொகுதிகளில் இன்று வேட்புமனு தாக்கல்  தொடங்கி 19ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்படுகின்றன. தொடர்ந்து  20ம் தேதி வேட்புமனு பரிசீலனையும்,  ஏப்ரல் 22ம் தேதி வரை வேட்புமனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அதைத்தொடர்ந்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.  இதைத்தொடர்ந்து மே 7ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.

3வது கட்ட தேர்தலானது, 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில்  நடைபெற உள்ளது. அதன்படி,  அஸ்ஸாம், பீகார், சத்தீஸ்கர், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ, கோவா, குஜராத், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.