டெல்லி: மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், அதை மீறி செயல்பட்ட காங்கிரஸ்  கட்சியின் பொதுச்செய லாளரான ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கு தேர்தல் ஆணையம் 48 மணி நேரம் தடை விதித்துள்ளது.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ந்தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில்,  உ.பி. மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. அங்கு யோகி தலைமையிலான பாஜக அரசை வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் இண்டியா கூட்டணி கடுமையாக செயலாற்றி வருகிறது.

உத்தர பிரதேசத்தின் மதுரா தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக சிட்டிங் எம்.பி. ஹேமமாலினி போட்டியிடுகிறார்.  அவர் குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், கட்சியின் மூத்த தலைவருமான ரந்தீப் சுர்ஜிவாலா பேசிய கருத்துகள் சர்ச்சையானது. சுர்ஜிவாலா நாகரிகமற்ற முறையில் ஹேமமாலினியைப் பற்றி பேசியதாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம்,  சுர்ஜிவாலாவின் கருத்துக்கள், கண்ணியமற்றது, கொச்சையானது மற்றும் நாகரீகமற்றது என்ற  கண்டித்துடன்,  தேர்தல் நடத்தை விதிகளை மீறியது என அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.

இதையடுத்து,  காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா இன்று மாலை 6 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்துக்கு தேர்தல் தொடர்பாக பேரணி, பேட்டி அளிக்கக் கூடாது என இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.