சென்னை: அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.
அதில், ‘My Captain’ செயலி”, அம்மா உணவகங்கள் சீரமைப்பு உள்பட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.
மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு விருதுநகர், மத்திய சென்னை உள்ளிட்ட 5 தொகுதி கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விருதுநகரில் தனது மகன் விஜய பிரபாகரனை களத்தில் இறக்கி உள்ளார். அங்கு கடும் போட்டி நிலவுகிறது.
இந்த நிலையில், விருதுநகரில் உள்ள தனியார் ரெசிடென்சியில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான 46 வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை வெளியிட்டார்.
- “MY CAPTAIN” என்ற செயலி உருவாக்கப்பட்டு பொதுமக்கள் குறைகள் கூறவும், மத்திய மாநில அரசு திட்டங்கள் குறித்த விவரங்கள் அறியவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- கேப்டன் இலவச கணினி மையம், தையல் பயிற்சி மையம் அமைத்து பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுவேன்]
- எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானம் போர்க்கால அடிப்படையில் நிறைவு செய்யப்படும்.
- தென்மாவட்ட மக்கள் பயன்பெற முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் துவங்கப்பட்ட காவேரி – வைகை – குண்டாறு இணைப்பு திட்டம் மீண்டும் துவங்க நடவடிக்கை
- நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் (MPLADS) தொகுதியில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களுக்கான புதிய சமையல் மற்றும் தளவாட பொருட்கள் வழங்கி புதுப்பொலிவுடன் சீரமைக்கப்படும்.
- அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரத்தில் பயிரிடப்படும் மல்லிகை விவசாயிகள் பயன்பெறும் வகையில் வாசனை திரவியம் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- விருதுநகரில் பரவலாக பயிரிடப்படும் சிறுதானியங்கள் மதிப்புக் கூட்டப்பட்டு விற்பனை செய்ய மத்திய அரசின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
- விருதுநகரில் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபேஷன் டெக்னாலஜி கல்லூரி (NIFT) துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் சாலைகள் நான்கு வழிச்சாலை ஆக்கப்படும்.
- விபத்தில்லா சிவகாசி என்ற திட்டத்தின் கீழ் பட்டாசு ஆலை விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு எளிதாக கல்வி கடன் கிடைக்க அனைத்து வங்கிகளையும் ஒருங்கிணைத்து முகாம்கள் நடத்தப்படும்.
- விருதுநகர் மக்களவை தொகுதியில் வீடற்ற ஏழைகளுக்கு மத்திய அரசின் திட்டத்தில் வீடு வழங்க நடவடிக்கை எடுப்பேன்.
- காய்கறிகள், பூக்கள், தானியங்கள் ஆகியவை பாதுகாக்க 100 டன் அளவிலான குளிர்ப்பதன கிடங்குகள் 50% மானியத்துடன் அதிகளவில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
- தேசிய அளவிலான போட்டி தேர்வில் நமது மாணவர்கள் அதிக அளவில் பங்கேற்கும் வண்ணம் என் சொந்த முயற்சியில் பயிற்சி மையம் அமைக்கப்படும்.
உள்பட ஏராளமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது , விருதுநகர் எங்களது பாரம்பரிய பூர்வீக மண். சொந்த மண்ணில் போட்டியுடுவதை மக்கள் வரவேற்கிறார்கள். மேற்கு வங்காலத்தில் மம்தா தனித்து போட்டியிடுகிறார். ஜெயலலிதா இருந்தபோது தனித்து போட்டியிட்டு மோடியா லேடியா என்று சொன்னார். உறுதியாக 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றுவோம். எடப்பாடி பழனிசாமி கை காட்டுபவர்தான் பிரதமராக வர வாய்ப்பு உள்ளது எனக் குறிப்பிட்டார்.