மும்பை

மும்பை அலுவலக ஊழியர்களுக்கு உணவு அளித்து வரும் டப்பாவாலாக்கள் மகக்ள்வை தேர்தலை முன்னிட்டு ஆறு நாட்கள் வருட விடுமுறையில் செல்கின்றனர்.

 

மும்பை நகரத்தில் மதிய நேரத்தில் உணவு டப்பாவை சுமந்தபடி செல்லும் டப்பாவாலாக்கள் எனப்படுபவர்கள் லட்சக்கணக்கில் உணவை அளித்து வருகின்றனர். இந்தப் பணியில் சுமார் பல்லாயிரக்கணக்கான பேர் நகரில் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் தினமும் டிபன் பாக்ஸ் களின் அடைக்கப்பட்ட உணவுகளை நகரெங்கும் எடுத்துச் சென்று அவரவர் அலுவலகங்களில்  அளிக்கும் பணியை செய்கின்றனர்.

இவர்களை நம்பி மும்பை நகர ஊழியர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என சொல்வது மிகையாகாது. நகரத்தில் மதிய நேரத்தில் சரியான நேரத்தில் உணவுகளை அளிப்பதில் இவர்கள் உலகப் புகழ் பெற்றுள்ளனர். இந்தப் பணி கடந்த 1968 ஆம் வருடம் சுமார் 100 தொழிலாளர்களுக்காக ஆரம்பிக்கபட்டதாகும். இந்த டப்பாவாலாக்கள் சங்கம் இதுவரை டப்பாவாலாக்கள் ஒரு முறை கூட நேரம் தவறியதில்லை என அறிவித்துள்ளது.

இவர்களில் பெரும்பாலானோர் மகாராஷ்டிரா மாநிலத்தில் பல பகுதிகளில் இருந்தும் வந்து இந்த பணிகளை செய்து வருகின்றனர். இவர்களில் பலருடைய ஊர்களில் தேர்தல் நேரத்தில் திருவிழா நடைபெறுகிறது. இவர்கள் தங்கள் ஊருக்கு சென்று திருவிழாவை காணவும் தேர்தலை முன்னிட்டும் ஆறு நாட்கள் விடுமுறையில் செல்ல உள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.

டப்பாவாலக்கள் சங்கக் தலைவர் சுபாஷ் தாலேகர் தாங்கள் அடிக்கடி ஊருக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளதால் தற்போது வருட விடுமுறை எடுத்துக் கொண்டு ஊருக்கு செல்ல உள்ளதாகவும் சிரமத்துக்கு வருந்துவதாகவும் வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார். அது மட்டுமின்றி தங்களுக்கு இந்த ஆறு நாட்களுக்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக் கூடாது எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.