சென்னை:

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக கட்சிகள் விறுவிறுப்பாக தேர்தல் தொடர் பான நடவடிக்கைகளையில் ஈடுபட்டு வரும் நிலையில், தேர்தல் பணி மற்றும் கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கும் வகையில்  தேமுதிக தலைவர் விஜயகாந்த் இந்த வாரம் சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில ஆண்டு களாக உடல்நலம் குன்றி சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த  ஆண்டு ஜூலை மாதம் சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சுமார் 6 மாதம் அங்கு சிகிச்சை பெற்று வரும், இந்த வாரம் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனைகள் நடத்தி வருகின்றனர். தேமுதிக விலும், எல்.கே. சுதீஷ் தலைமையில் மாநில நிர்வாகிகள் டாக்டர் இளங்கோவன், அழகாபுரம் மோகன்ராஜ், பார்த்தசாரதி, திருப்பூர் அக்பர் ஆகியோர்  இடம்பெற்றுள்ள கூட்டணி பேச்சுவார்த்தைக்காக குழு  அமைக்கப்பட்டு உள்ளது.

ஆனால், தேமுக தலைவர் விஜயகாந்த் தலைமையில்தான்  கூட்டணி பேச்சு வார்த்தை தொடங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் விரும்புகின்றனர். அதன் காரணமாக,  சிகிச்சை முடிந்து விஜயகாந்த்  இந்த வாரம் சென்னை திரும்ப இருப்பதாகவும், அதைத்தொடர்ந்தே கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்திற்கு மக்கள் மத்தியில் ஓரளவு செல்வாக்கு உள்ள நிலையில், அவரது வருகையை கட்சியின் உறுப்பினர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில், திமுக கூட்டணிக்கு எதிராக மாபெரும் கூட்டணி அமைப்போம் என்று அறிவித்துள்ள பாஜக, தங்களது கூட்டணியில் தேமுதிகவையும் இணைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.