சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் காவல்துறையினர் தபால் வாக்கு பதிவு இன்றுமுதல் தொடங்கி உள்ளது. அதன்படி வரும் 13ந்தேதி வரை காவல்துறையினர் தங்களது வாக்குகளை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில், போலீஸார் தபால் வாக்கு செலுத்த 3 இடங்களில் வாக்குப்பதிவு மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டின் 18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி வாக்குப்பதிவு நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக, மற்றும் நாம் தமிழர் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவை தொகுதிகளிலும் 609 சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 950 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், ஆளும் திமுக சார்பில் 23, அதிமுக 34, பாஜக 23, காங்கிரஸ் 9 மற்றும் பகுஜன் சமாஜ், நாம் தமிழர் கட்சி சார்பில் தலா 39, பாமக சார்பில் 10 பேர், நாடாளும் மக்கள் கட்சி சார்பில் 12 பேர் களத்தில் உள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் 85வயதுக்கு மேற்பட்டோர் தபால் வாக்கு வீடு வீடாக சென்று சேகரிக்கும் பணி ஏற்கனவே ஏப்ரல் 1ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தேர்தல் பணியில் உள்ள காவல்துறையினரும் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில், சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றுபவர்களில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் இன்று முதல் 13-ம்தேதி வரை காலை 9 முதல் மாலை 5 மணி வரை தபால் வாக்குகளை செலுத்த சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தேர்தல் நடத்தும் அலுவலர்களின் அலுவலகத்தில் சிறப்பு தபால் வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பேசின் பாலம் சாலை, மூலகொத்தளம் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சியின் வட சென்னை வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையத்தில் வடசென்னை, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், பெரம்பலூர் ஆகிய மக்களவை தொகுதிகளை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம்.
அடையார், முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில், தென் சென்னை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம்.
செனாய் நகர், புல்லா அவென்யூவில் உள்ள மத்திய வட்டார துணை ஆணையர் அலுவகத்தில் மத்திய சென்னை, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், நீலகிரி, கோவை, பொள்ளாட்சி, திண்டுக்கல், கரூர், திருச்சி, கடலூர், சிதம்பரம் மற்றும் புதுச்சேரி ஆகிய தொகுதிகளை சேர்ந்தவர்கள் தபால் வாக்குகளை செலுத்தலாம்.
தகுதியுள்ள போலீஸார் வாக்குச்சாவடிகளுக்கு தகுந்த ஆவணங்கள் மற்றும் காவலர் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.