சென்னை: தமிழகத்தில் அதிக இடங்களை கைப்பற்றப்போவது யார்..? என்பது குறித்து  இந்தியா டிவி – சிஎன்எக்ஸ் நிறுவனம் இணைந்த கருத்துக்கணிப்பு எடுத்து வெளியிட்டு உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 5 இடங்கள் கிடைக்கும் என தெரிவித்து உள்ளது. சமீபத்தில் இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில், தமிழ்நாட்டில் உள்ள 39 இடங்களையும் திமுக கூட்டணி கைப்பற்றும் என வெளியிட்டிருந்த நிலையில், இந்தியா டிவி கருத்து கணிப்பு வேறாக உள்ளது.

தற்போது செயல்பாட்டில் உள்ள நாடாளுமன்றத்தின் 17-வது மக்களவைக்கான காலம் வருகிற ஜூன் 16ந்தேதியுடன் முடிவடையும் நிலையில்,  18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  அதன்படி,, மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19ந்தேதி நடைபெறுகிறது.  2-ம் கட்ட தேர்தல்கள் ஏப்ரல் 26-ம் தேதியும்,  3-ம் கட்ட தேர்தல் மே 7-ம் தேதியும், 4-ம் கட்ட தேர்தல் மே-13-ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே-25-ம் தேதியும், 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியும் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ந்தேதி நடைபெறும் என்றும்  அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி, தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில்  முற்கட்ட  பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இதையொட்டி, அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் என 4 முனை போட்டி நிலவுகிறது.

தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் பாமக, த.மா.கா., பாரிவேந்தர் உள்பட சில கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாஜக மட்டும்  23 இடங்களில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது.  , புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயகக் கட்சி ( ஐஜேகே ) பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தென்காசி தொகுதியிலும் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன.  அதே நேரத்தில், பாஜக அணியில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக நேற்று இரவு அறிவித்தார்.

பாட்டாளி மக்கள் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது.  காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமாகா ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர், தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது.  அமமுகவுக்கு திருச்சி, தேனி ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அக்கட்சி வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளனர்.

இந்த நிலையில், தமிழக மக்களின் மனநிலை என்ன என்பது குறித்து, இந்தியா டிவி மற்றும் சிஎன்எக்ஸ் நிறுவனம் இணைந்து கருத்து கணிப்பை நடத்தி வெளியிட்டு உள்ளன. அதன்படி,

தமிழ்நாட்டில் , திமுக கூட்டணி  30 இடங்களை பிடிக்கும் என தெரிவித்து உள்ளது. இதில், திமுக 18 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றிக்கனியை பறிக்கும் என குறிப்பிட்டுள்ளது.

மேலும், அதிமுக கூட்டணி 4 இடங்கள்,

பாஜக கூட்டணி கோவை உள்பட  5 இடங்கள் வெல்லும் என்று தெரிவித்துள்ளது.

எனவே இந்த கருத்துக்கணிப்பின்படி தமிழ்நாட்டில் திமுக பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றுகிறது.

மேலும் நாடு முழுவதும் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில், பாஜக தலைமையிலான என்டிஏ 399 இடங்களைக் கைப்பற்றலாம், காங்கிரஸ் வெறும் 38 இடங்களைப் பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் 39 இடங்களையும் இந்தியா கூட்டணி கைப்பற்றும்! இந்தியா டுடே கருத்துக் கணிப்பு