சென்னை: மக்களவை தேர்தலையொட்டி, தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்களின் பட்டியலை, இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளில் போட்டியிடும், இறுதி வேட்பாளர்களின் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது. அதைத்தொடர்ந்து கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணியும் நடைபெறும்.
18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல், தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் முற்கட்ட பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடை பெறுகிறது. அன்றைய தினமே தமிழகத்தில் காலியாக உள்ள விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இதையொட்டி, மார்ச் 19ந்தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி மார்ச் 27-ந் தேதியுடன் முடிவடைந்தது. மார்ச் 28ந்தேதி வேட்பு மனு மீதான பரிசீலனையும், மார்ச் 29ந்தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறவும் கடைசி நாளாகும். ஆனால் நேற்று விடுமுறை தினம் என்பதால், இன்று மாலை 5மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெறலாம். இதையடுத்து இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
மாநிலத்தில் உள்ள 39 தொகுதிகளில் போட்டியிட 1,403 வேட்பாளர்கள் 1,749 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 73 பேரும், அதற்கு அடுத்தபடியாக வடசென்னையில் 67 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
புதுச்சேரியில் 34 வேட்பாளர்கள் 45 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் போட்டியிட 18 வேட்பாளர்கள் 22 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வேட்புமனுக்கள் பரிசீலனைக்குப் பிறகு, தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளில் 1,085 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 27 வேட்பாளர்கள் சமர்ப்பித்த 36 மனுக்கள் ஏற்கப்பட்டன. அதேபோல, விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 14 மனுக்கள் ஏற்கப்பட்டன. 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மார்ச் 29ந்தேதி புனித வெள்ளி பொது விடுமுறை என்பதால் மனுக்கள் வாபஸ் தொடர்பான பணிகள் நடைபெறவில்லை. இதையடுத்து தேர்தல் ஆணைய அறிக்கையின்படி, வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கான அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது.
அதன்பிறகு, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். அத்துடன், சின்னம் ஒதுக்கப்படாத அரசியல் கட்சிகளான விசிக, மதிமுக மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னமும் ஒதுக்கப்பட உள்ளன.