டில்லி

டந்து முடிந்த மக்களவை  தேர்தல் மீது 64  முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் கடுமையாக குற்றம் கூறி உள்ளனர்.

மக்களவை தேர்தல் தேதிகள் இந்த வருடம் மார்ச் மாத்ம் 10 ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது.

இந்த தேர்தல் மிகவும் நியாயமற்ற முறையில் நடைபெற்றுள்ளதாக 64 முன்னாள் சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தேர்தல் ஆணையர்களிடம் குற்றச்சாட்டு அளித்துள்ளனர்.

அவர்கள் அனுப்பியுள்ள அந்த புகார் கடிதத்தில், “தேர்தல் ஆணையம் வெளிப்படைத் தன்மையுடன் இயங்க வேண்டும் என்பது முக்கியமான விதி ஆகும். ஆனால் தேர்தல் ஆணையம் பல முறை காரணமின்றி தனது முடிவை மாற்றிக் கொண்டும் ரத்து செய்தபடியும் இருந்தது. இது தேர்தல் அதிகாரிகள் விவகாரத்தில் அதிகமாக நடந்து வந்தது. இது போன்ற பல நியாயமற்ற செயல்கள் நடந்துள்ளன.

இந்த முறை தேர்தல் தேதி அறிவிப்பதிலும் மிகவும் தாமதம் ஏற்பட்டது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி பிப்ரவரி 4 முதல் மார்ச் 9 வரை சுமார் 157 நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். அவர் தனது கடைசி திட்ட தொடக்க விழாவை 9 ஆம் தேதி முடித்த பிறகு தேர்தல் ஆணையம் 10 ஆம் தேதி அன்று தேர்தல் தேதிகளை அறிவித்தது. இது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவாக ஆணையம் நடந்துக் கொள்வதாகவே அனைவரும் கருதுகிறோம்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் ஆதாருடன்  வாக்காளர் அடையாள அட்டை இணைக்கவில்லை எனக் கூறி 55 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த இணைப்பு தேவை இல்லை என நீதிமன்றம் அறிவித்த பிறகும் அவர்கள் இணைக்கப்படவில்லை. அது மட்டுமின்றி நாடெங்கும் 4 கோடி இஸ்லாமிய வாக்காளர்களும் 3 கோடி தலித் வாக்காளர்கள் பெயரும் நீக்கப்பட்டுள்ளதாக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் நன்னடத்தை சட்ட மீறல் குற்றச்சாட்டுக்கள் அனைத்து வேட்பாளர்கள் மீதும் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த புகார்களில் மோடிக்கு ஆதரவாக தீர்ப்புகள் வழங்கப்பட்டன. குறிப்பாக மோடியின் பிரசார உரைகள் மீதான புகார்கள் குறித்து எவ்வித தீர்ப்பும் கூற மறுத்த தேர்தல் ஆணையம் திடீரென அவருக்கு குற்றமற்றவர் என நற்சான்றிதழ் வழங்கியது. .

பாஜக தலைவர் ஒரு கூட்டத்தில் சட்ட விரோதமாக குடி புகுந்தோரை வங்காள விரிகுடா கடலில் தூக்கி எறிய வேண்டும் என வன்முறையாக பேசி உள்ளார். ஆனால் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் இதில் தலையிட்டு தேர்தல் ஆணையத்துக்கு உள்ள அதிகாரம் பற்றி கூறிய பிறகே இந்த புகார் விசாரணைக்கே எடுத்துக் கொள்ளப்பட்டது ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Thanks : THE WIRE