டெல்லி: நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மக்களவையில் திமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால், மக்களவை மதியம் 2மணி வரை ஒத்தி வைக்கப் பட்டது. அதுபோல மாநிலங்களவையிலும் 12எம்.பிக்கள் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி எதிர்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை 2மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29 முதல் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 23ந்தேதியுடன் முடிவடைய உள்ளது. கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் 3 நாள்களே உள்ள நிலையில் பல்வேறு மசோதாக்களை அமளிகளுக்கு இடையே மத்தியஅரசு நிறைவேற்றி வருகிறது.
இற்த நிலையில், இன்றைய கூட்டம் தொடங்கியவுடன் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி பதாகைகளுடன் திமுக எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து சபாநாயகர் கேட்டுக்கொண்டும் அமைதியடையாமல் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியதால், அவை பிற்பகல் 2மணி வரை ஒத்தி வைக்கப்படுவ தாக அவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
அதுபோல, மாநிலங்களவையிலும், சஸ்பெண்டு செய்யப்பட்ட 12 எம்.பி.க்கள் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளி யில் ஈடுபட்டதால், அவை 2மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, நாடாளுமன்றத்தில் இன்றைய விவகாரங்கள் மற்றும் தங்களின் நிலைப்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் இணைந்து ஆலோசனை மேற்கொண்டன. நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிவசேனையின் சஞ்சய் ரௌத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.