டெல்லி: மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் பதில் அளிக்க வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் செய்யும் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் இன்று 5வது நாளாக எதிர்க்கட்சி எம்.பி.க்களால் முடக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி, இரு அவைகளையும் எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன. இதற்கிடையில், மோடி தலைமையிலான பாஜக அரசுமீது காங்கிரஸ், கேசிஆர் கட்சி ஆகியவை நம்பிக்கையில்லா தீர்மானமும் கொண்டு வந்துள்ளது.
இந்த நிலையில், இன்று காலை அவை தொடங்கியதும், காங்கிரஸ் வெற்றி தினத்தையொட்டி, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து,. மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி பதில் அளிக்க கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவாதிக்க அரசு தயார் என்று கூறி வரும் நிலையில், பிரதமர்தான் பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி அவையை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.