உஜ்ஜயினி
லோக் ஆயுக்தா போலீசார் ஒரு பெண் அதிகாரியின் அலுவலகம் மற்றும் வீட்டில் இருந்து கணக்கில் வராத பல சொத்துக்களை கண்டு பிடித்துள்ளனர்.
மத்தியப் பிரதேச நகர்ப்புற வளர்ச்சித்துறையில் துணை இயக்குனராக பணி புரிபவர் அனிதா குராதே. இவர் ஊழல் செய்து பல சொத்துக்களை கணக்கில் காட்டாமல் வாங்கி உள்ளதாக புகார் வந்ததை ஒட்டி லோக் ஆயுக்தா என அழைக்கப்படும் லஞ்ச ஒழிப்புத் துறை போலிசார் சோதனை மேற்கொண்டனர். இவரது அலுவலகம், வீடு உட்பட மூன்று இடங்களில் சோதனைகள் நடை பெற்றன.
இந்த சோதனையில் அனிதாவுக்கு பல சொத்துக்கள் கணக்கில் வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தூரில் ஒரு பங்களா வீடு, 3500 சதுர அடியில் ஒரு பண்ணை வீடு, வெவ்வேறு இடங்களில் 8 கடைகள், ரொக்கப்பணமாக ரூ.15 லட்சம், மற்றும் ஏராளமான நகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் அனிதாவின் பெயரிலும் அவருடைய நெருங்கிய உறவினர் பெயரிலும் வாங்கப் பட்டுள்ளன.
இது தவிர ‘ரவு’ பகுதியில் உள்ள ஒரு பெரிய ஓட்டலிலும் அவருக்கு பங்கு இருப்பதாக சந்தேகம் உள்ளது. அவர் பெயரில் மட்டும் சுமார் 20 முதல் 25 வங்கிக் கணக்குகள் உள்ளன.
அனிதா 1994 ஆம் ஆண்டு அரசுப் பணியில் சேர்ந்துள்ளார். அதில் இருந்தே அவர் ஊழல் செய்து இத்தனை சொத்துக்களை வாங்கி உள்ளார் என தெரிய வந்துள்ளது.
மேலும் சோதனை நடந்து வருகிறது.