மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வருவதால், ஊரடங்கு இம்மாத இறுதிவரை நீட்டிக்கப்படலாம் என முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது மகாராஷ்டிரா மாநிலம். அங்கு இதுவரை 17 ஆயிரத்து 974 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 694 பேர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்டோரில் 90 விழுக்காட்டினர் மும்பை, புனே பெருநகரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். மக்கள் நெருக்கம் உள்ள தாராவியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், இன்று மாநில முதல்வர் உத்தவ்தாக்கரே அனைத்துக்கட்சித் தலைவர்களுடன், கொரோனா பரவல், நிவாரணம் தொடர்பாக காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் கலந்துகொண்ட நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, கொரோனா பரவல் அதிகம் உள்ள இடங்களில் மாநிலப் பேரிடர் மீட்புப் படையினரைப் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
மேலும், பாஜகவின் பிரவீன் தாரேகர், வஞ்சித் பகுஜன் அகதி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் ஆகியோரும் கலந்துகொண்டனர். அவர்கள் ஊரடங்கை மே இறுதிவரை நீட்டிக்க வலியுறுத்தினர். இதை முதல்வர உத்தவ் தாக்கரே ஏற்றுள்ளதாகவும், முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவும் ஊரடங்கை இம்மாதம் இறுதி வரை நீட்டிக்க விரும்புவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.