சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் வரும் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் சனிக்கிழமை (23ந்தேதி) காலை 11:30மணிக்கு நடைப்பெற உள்ளது.

கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் மே 13 ஆம் தேதி நடைபெற்றது. அதில், ‘நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களை கொண்ட ஆலோசனை குழு அமைக்கலாம்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. அதன்படி அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, பின்வரும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு, முதலமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் திமுக சார்பில் ஆயிரம் விளக்குதொகுதி எம்எல்ஏ டாக்டர் நா.எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர்  சி. விஜயபாஸ்கர், காங்கிரஸ் சார்பில் ஏ.எம். முனிரத்தினம், பாட்டாளி மக்கள் கட்சி, ஜி.கே. மணி, பாஜக, நயினார் நாகேந்திரன், மதிமுக, மருத்துவர் சதன் திருமலைக்குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி, எஸ்.எஸ். பாலாஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வி.பி. நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தி. ராமசந்திரன், மனிதநேய மக்கள் கட்சி முனைவர் ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ரா.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமை கட்சி, தி.வேல்முருகன், புரட்சி பாரதம், பூவை ஜெகன் மூர்த்தி ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த ஆலோசனை குழு, அவசர அவசியம் கருதி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் பெற அவ்வப்போது கூடி விவாதித்து வருகிறது. இந்த குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் வரும் 23ந்தேதி ஆலோசனை நடத்துகிறார். அப்போது கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி போடுவது, லொக்டவுன் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தைத்தொடர்ந்தே, ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படுமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது குறித்து தமிழகஅரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.