சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, 15 நாட்கள் தளர்வுகளற்ற பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது. இது வரும் 7ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது. இதையடுத்து, கொரோனா பரவல், ஊரடங்கு குறித்து தமிழகஅரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதற்கிடையே கொரோனா ஊரடங்கு குறித்து வீடியோ மூலம் தமிழக மக்களுடன் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது. அதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மக்கள் கட்டுப்பாடுகளை முழுமையாக பின்பற்றினால் கொரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், கொரேனா தொற்று பரவலை தடுக்கும் வகையில்,. மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைகள் முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுஉள்ளது. அதில்,
தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்த வேண்டும்
மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியாக சீரான தொற்று பாதிப்பு குறையவில்லை. இதனால் மாநிலம் முழுவதும் ஊரடங்கை தளர்த்துவது என்பது கடினமானது/
சென்னை உள்பட சில மாவட்டங்களில் தொற்று பரவல் குறைந்து வந்தாலும், வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு காலத்தில் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இதனால், மாவட்டங்களில் உள்ள பாதிப்புகளுக்கு தகுந்தவாறு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கலாம்.
இதுகுறித்து செய்தியளார்களை சந்தித்த மருத்துவ நிபுணர்கள் குழுவினர்., ‘சென்னை மண்டலத்தில் பாதிப்புகள் வெகுவாக குறைந்துவிட்டாலும் மேற்கு மண்டலத்தில் சில பகுதிகளில் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மாவட்டங்களை எடுத்துக்கொண்டால், ஈரோட்டில் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதேவேளையில் கோவையில் தொற்று பாதிப்பு குறையத்தொடங்கி இருக்கிறது.
குறைந்த தொற்று விகிதம் மற்றும் காலியான மருத்துவமனை வார்டுகளை கொண்ட ஒரு மண்டலத்தில் ஊரடங்கை நீட்டிப்பதில் அர்த்தமில்லை. மாவட்ட அளவிலான தொற்று நோய் காரணிகளின் அடிப்படையில் தடைகளை நீட்டிப்பது அல்லது குறைப்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்.
வெவ்வேறு மாவட்டங்களில் தொற்று பாதிப்பில் வித்தியாசங்கள் நிலவுவதால் தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வை படிப்படியாக அமல்படுத்தலாம். முதலில் தொற்று பாதிப்பு குறைந்துள்ள மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்து திறக்கலாம்.
அதேவேளையில் கொரோனாவின் அடுத்த அலை மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களை கையாள மாவட்டங்கள் முழுவதும் படுக்கைகள் மற்றும் மனித வளங்களை அதிகரிக்க அரசு தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
இவ்வாறு கூறியுள்ளனர்.