சென்னை: தமிழகத்தில் 7வது கட்ட ஊரடங்கு வரும் 31ந்தேதி உடன் முடிவடைய உள்ள நிலை யில், ஊரடங்கு நீட்டிப்பு, இ-பாஸ் விவகாரம் தொடர்பாக ஆகஸ்டு 29ந் தேதி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் தமிழகம் உள்பட சில குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால், பெரும்பாலான மாநிலங்கள், ஊரடங்கில் இருந்து விலக்கு அளித்து சகஜ நிலைக்கு திரும்பி வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கை முழுமையாக நீக்கும்படி வேண்டுகோள் விடுத்து வருகின்றன. அதன்படியே மாநிலங்களுக்கு இடையே செல்ல தடை ஏற்படுத்தும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. மேலும், சினிமா படப்பிடிப்பு உள்பட பல்வேறு தளர்வுகளும் அறிவித்து உள்ளது. மேலும் 3வது கட்ட தளர்வில் பேருந்து, ரயில், விமான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரேனா பரவல் தீவிரம் காரணமாக, தமிழகஅரசு, இ-பாஸ் நடைமுறை உள்பட பல விஷயங்களில் தளர்வகள் அளிக்காமல், தொடர்ந்து கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், நேற்று தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் கொரோனா நிலவரம், ‘இ-பாஸ்’ நடைமுறை குறித்து ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து, தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய முடியுமா? கொரோனா ஊரடங்கை முற்றிலும் விலக்கலாமா என்பது குறித்து முடிவெடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் விரிவான ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.
அதன்படி 29-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்தே இ-பாஸ் நடைமுறை , கொரோனா ஊரடங்கு மற்றும் தளர்வுகள் குறித்து அவர் அறிவிப்பார் என தெரிகிறது.