மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், மாநிலத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்படுத்துவது குறித்து  சில தினங்களில் மீண்டும் முடிவு செய்யப்படும்  என முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்புக்குள்ளான மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு நேற்று மட்டும் புதிதாக 13,659 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 22,52,057 ஆக உயர்நதுள்ளது. தற்போதைய நிலையில் மாநிலம் முழுவதும 99,008 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 20,99,207 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ள நிலையில், 52,610 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தில் மீண்டும் அதிகரித்து வருவதால், சில பகுதிகளில் பகுதி நேர லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு உள்ளது.  நாசிக், மாலேகான் மற்றும் அவுரங்கபாத் நகரத்தில் ஒரு பகுதி லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய கொரோனா வைரஸ் பரவல் சூழலை பார்க்கும்போது மீண்டும் லாக்டவுன் விதிக்கப்படுமோ என்ற சந்தேகம் அங்கு நிலவுகிறது.

மேலும் முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  மகாராஷ்டிராவில் 2வது லாக்டவுனை அமல்படுத்துவது குறித்து அடுத்த சில தினங்களில் முடிவு எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

லாக்டவுன் விதிக்கும் வாய்ப்பை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாது என்றால், இந்த விஷயத்தில், விரைவில் ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும். அடுத்த சில நாட்களுக்குள் நிலைமையை நாங்கள் ஆய்வு செய்து முடிவெடுப்போம். இரண்டாவது லாக்டவுனை தவிர்க்க, கோவிட்-19 தொடர்பான விதிமுறைகளை கடைப்பிடிக்குமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.