டெல்லி: 4ம் கட்ட ஊரடங்கு அறிவிக்கப்படும் போது விமான சேவை மற்றும் ரயில்கள் இயக்கத்துக்கு சில தளர்வுகளுடன் அனுமதி தரப்படும் என்று தெரிகிறது.
நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளது. 3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிகிறது. அதன்பிறகு சில கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு இருக்கும். அதனை அந்தந்த மாநிலங்களே அமல்படுத்திக் கொள்ளலாம் என்று பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
3ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிய உள்ள நிலையில் 4ம் கட்ட ஊரடங்கின் போது சில தளர்வுகளுடன் வான்வழி மற்றும் ரயில் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மெட்ரோ ரயில் சேவை, விமான போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று தெரிகிறது.
சமூக இடைவெளியை பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயத்துடன் இதற்கு அனுமதி தர அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அநேகமாக இந்த 4ம் கட்ட ஊரடங்கு இம்மாதம் 31ம் தேதி வரை இருக்கக்கூடும் என்று தெரிகிறது. பிரம்மாண்ட மால்கள், வணிக வளாகங்கள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்க அனுமதி தரப்படும் என்று தெரிகிறது.