சென்னை,

ள்ளாட்சி தேர்தல் ஜூலை மாத இறுதிக்கு பிறகே நடத்த முடியும் என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து  வழக்கை  ஜூலை 14ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதி மன்றம் அப்போது தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான வழக்கும் அன்றே விசாரிக்கப்படும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டது. அப்போது தமிழக தேர்தல் ஆணையம் சார்பாக தாக்கல் செய்த மனுவில், ஜூலை இறுதிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை  வெளியிட முடியும் என்று தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் நிறைவடைந்தது.எனவே புதிய பிரதிநிதிகளை தேர்தெடுக்கும் வகையில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இது தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கின் காரணமாக,  தேர்தலை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பாணையை வெளியிட்டு கடந்த டிசம்பர் மாதம் 31 ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உத்தரவிட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் அரசும், தேர்தல் ஆணையமும் தொடர்ந்து தாமதப்படுத்தி வந்ததால், தேர்தலை அறிவித்த தேதிக்குள் நடத்த முடியாமல் போனது.

அதைத்தொடர்ந்து  உள்ளாட்சி அமைப்புகளின் பணிகளை கவனிக்கும் வகையில் நியமிக்கப்பட்ட தனி அதிகாரிகளின் பதவி காலமும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜூலை இறுதிக்கு பிறகே வெளியிட முடியும் என்றும்,  உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

2017 ஜனவரி மாத இறுதி பட்டியலின்படி வார்டுகள் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் மேலும் தள்ளிபோக வாய்ப்புள்ளது.