சென்னை:

மிழகத்தில் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடித்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. தற்போது வாக்குச் சீட்டு அச்சடிக்கும் பணி நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் தேதி ஒரு வாரத்தில் வெளியாகிறது – ஓட்டுச்சீட்டு அச்சடிப்பு பணி தீவிரம் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அனைத்து பணிகளும் ஓரளவு முடிந்து விட்டதால், 1 வாரத்தில் தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளது. தேர்தல் தொடர்பாக நடைபெற்ற வழக்குகளை அடுத்து,  உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளாட்சிகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றம் உத்தரவைத் தொடர்ந்து, 3 ஆண்டு தாமதத்திற்குப் பிறகு இந்த ஆண்டு இறுதிக்குள்  உள்ளாட்சித் தேர்தலை நடத்த தமிழகஅரசு திட்டமிட்டு உள்ளது.

இது தொடர்பான வேலைகள் சுறுசுறுப்படைந்து உள்ளது. ஏற்கனவே  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் போன்ற பணிகளை முடித்து, வாக்காளர் பட்டியலை இறுதி செய்யும் பணியில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு  உள்ளது. அது மட்டுமின்றி உள்ளாட்சி தேர்தல் பணிக்காக தேர்தல் அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான நடவடிக்கையிலும் மாநில தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்குப்பதிவு நடைபெறும் வகையில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கோரி உள்ளது.

அதுபோல,  கிராம பஞ்சாயத்துக்களில்,  ஓட்டு சீட்டு முறையில் வாக்குப்பதிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஓட்டு சீட்டு அச்சடிக்கும் காகிதம் கொள்முதலுக்கு டெண்டர் விடப்பட்டிருந்தது.

அதைத்தொடர்ந்து, தேவையான காகிதம் கொள்முதல் செய்யப்பட்டு வாக்குச்சீட்டு அச்சடிப்பு தொடர்பாக  ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை 5 கட்டங்களாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. தேர்தலுக்கான ஆரம்ப கட்ட பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டு, தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாகவும்,  இன்னும் சில நாட்களில் தேர்தல் தேதியை  தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான உச்சநீதி மன்ற வழக்கில், கடந்த விசாரணையின்போது மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டிருந்த நிலையில், அடுத்த விசாரணையின்போது, தமிழக தேர்தல்ஆணையம் தரப்பில், தேர்தல் தேதிகள், தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் நாள், ஓட்டுப்பதிவு நாள், ஓட்டு எண்ணிக்கை நாள்  குறித்த அட்டவணையை தாக்கல் செய்யும் என கூறப்படுகிறது.

உச்சநீதி மன்றம்  உத்தரவின்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழகஅரசு ஏற்கனவே  உறுதி அளித்தது.  அதற்கு ஏற்றார்போல, கடந்த மே மாதம் உள்ளாட்சித் தேர்தலுக்கான வழிமுறைகளை தமிழகஅரசு வெளியிட்டிருந்தது.  மேலும்,   மாநகராட்சிகளில் 1400 வாக்களர்களுக்கு ஒரு வாக்குச்சாவடியும், 1400 முதல் 2800 வரை இருந்தால் 2 வாக்குச்சாவடிகளும், 2800க்கும் மேற்பட்டவர்கள் இருந்தால் 3 வாக்குச்சாவடி களும் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறி இருந்தது.

அதைத்தொடர்ந்து, வார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.