சென்னை,

ள்ளாட்சி தேர்தல் வழக்கில் இன்று சென்னை ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில் இந்த மாதம் 18ந்தேதிக்குள் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும் என்றும், நவம்பர் 17ந்தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் கூறி உள்ளது.

தமிழகத்தில்  உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தொடங்கியது.

ஆனால், இடஒதுக்கீடுகுறித்த அறிவிப்பு முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, தி.மு.க. தொடர்ந்த வழக்கையடுத்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, உள்ளாட்சிகளை நிர்வகிக்க அரசு  சார்பில்  தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் பதவிக்காலம்டி சம்பர் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அரசு அறிவிப்புக்கு எதிர்ப்பு  தெரிவித்து  ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் பாடம் நாராயணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்த வழக்குடன்  உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகத் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்துவந்தது.

இந்த வழக்கில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான உத்தேச அட்டவணையை கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தது. அதைத் தொடர்ந்து விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று தீர்ப்பு வெளியானது. அதில்,  நவம்பர் 17ந்தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்றும், அதற்கான அறிவிப்பு செப்டம்பர் 18ந்தேதிக்குள் வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வேட்பாளர்களின் குற்றப்பின்னணி குறித்தும் இணைய தளங்களில் வெளியிடப்பட வேண்டும் என்று தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது.