சென்னை:
திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், கம்யூ. கட்சிகளின் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடுவது, கூட்டணி கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்குவது குறித்து கூட்டணி கட்சியினருடன் திமுக தலைமை ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் அதிமுகவைப் போலவே திமுகவிலும் அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் மூலமே தேர்தல் பங்கீடு நடத்திக் கொள்ள வேண்டும் என்று கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, , பல மாவட்டச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள கூட்டணிக் கட்சியினரோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு திமுக கூட்டணி கட்சியான கம்யூனிஸ்டு கட்சித் தலைவர்கள் முத்தரசன், பாலகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் வருகை தந்தனர். அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.
திருச்சி மாவட்டச் செயலாளர் கே.என். நேரு திருச்சியில்உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கூட்டணிக் கட்சியினரோடு கலந்து பேசி யாருக்கு எவ்வளவு இடங்கள் என்பதை முடிவு செய்திருக்கிறார். இதுபோலவே அனைத்து மாவட்டங்களிலும் திமுக உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராகிறது.