சென்னை,

ள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் விளக்கம் கேட்டு தமிழக தேர்தல் ஆணையம் இன்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளது.

இதன் காரணமாக தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் மேலும் தாமதமாக லாம் என்று கூறப்படுகிறது.

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழகத்தில், 12 மாநகராட்சிகள், 123 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 12 ஆயிரத்து 524 கிராமப் பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24 ம் தேதியுடன் முடிந்தது. உள்ளாட்சித் தேர்தலை நடத்த கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆனால், உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு முறையாக பின் பற்றப்படவில்லை என திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வந்தது.

அதையடுத்து கடந்த 4ந்தேதி உள்ளாட்சி தேர்தல் குறித்து  சென்னை  ஐகோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு  தீர்ப்பு கூறியது.

அதில், வரும் 18ந்தேதிக்குள் தேர்தல் தேதி அட்டவணையை வெளியிடவும்,  நவம்பர் மாதம் 17ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் விளக்கம் கேட்டு புதிய மனு தாக்கல் செய்திருக்கிறது.

அதில்,  1996 பிரிக்கப்பட்ட வார்டு முறைப்படி தேர்தல் நடத்த வேண்டுமா என்று குழப்பம் உள்ளதாக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இடஒதுக்கீடு முறையில் தொகுதிகள் இன்னமும் வரையறை செய்யப்படவில்லை. வார்டு வரையரை தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் விளக்கம் தேவை என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் மேலும் ஒரு மனுவை தாக்கல் செய்ய  தேர்தல் ஆணையம்  முடிவு செய்திருப்ப தாகவும் கூறப்படுகிறது. இந்த இரு மனுக்களும்   நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிகிறது.

உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை இன்றைக்குள் வெளியிடாவிட்டால் தமிழக தேர்தல் ஆணையம் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.