தர்மபுரி: அரசு தொடக்கப்பள்ளியில் பல்லி கிடந்த காலை உணவை சாப்பிட்ட மாணவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிர்ச்சி சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் அரங்கேறி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தர்மபுரி மாவட்டம், தேவரசம்பட்டி கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், தமிழ்நாடு அரசு வழங்கும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் குறைந்த அளவிலேயே மாணவர்கள் படித்துவருகின்றனர். இதனால், பள்ளி வளாகத்திலேயே காலை உணவு சமைத்து வழங்கப்படுகிறது.
அதன்படி, இன்று காலை வழக்கம்போல காலை உணவு சமைக்கப்பட்டு, பள்ளி மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. அதை பள்ளி குழந்தைகளும் சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென உணவு சமைத்த பாத்திரத்தை கண்ட சமையல்காரரும் சில பள்ளி குழந்தைகளும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
இதைத்தொடர்ந்து காலை உணவு சாப்பிட வேண்டாம் என பள்ளி மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அதற்குள் 19 மாணவ, மாணவிகள் சாப்பிட்டு விட்டதாககூறப்படுகிறது. இதனால், அந்த மாணவ மாணவிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் உடனே அரசு அலுவலர்களுக்கும், மருத்துவ குழுவினருக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக விரைந்து வந்த அரசு மருத்துவ குழுவினர் நேரில் வந்து, உணவு சாப்பிட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசோதனை எசய்து சிகிச்சை அளித்தனர்.
இந்த தகவல், பெற்றோருக்குத் தெரிந்து அவர்கள் பள்ளியில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது இந்த சம்பவம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.