ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 8 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. வரும் 10 ஆம் தேதி தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
50 சதவீத இருக்கைகளில் மட்டுமே ரசிகர்கள் அமரவைக்கப்பட வேண்டும் என அரசு நிபந்தனை விதித்துள்ளது.
தியேட்டர்கள், திறக்கப்படும் நான்காவது நாளில் தீபாவளி பண்டிகை வருகிறது. வழக்கமாக தீபாவளி பண்டிகையின் போது பெரிய நடிகர்கள் படங்கள் மட்டுமே வெளியாகும்.
ஆனால் இந்த ஆண்டு தீபாவளிக்கு எந்த பெரிய நடிகரின் படமும் ரிலீஸ் ஆகப்போவதில்லை. இன்றைய நிலவரப்படி தீபாவளி ரிலீசுக்கு மூன்று சின்ன பட்ஜெட் படங்கள் தயாராக உள்ளன.
ஜீவா- அருள்நிதி நடித்து என்.ராஜசேகர் இயக்கியுள்ள ’களத்தில் சந்திப்போம்’, . சசிகுமார் நடித்து பொன்ராம் டைரக்ட் செய்துள்ள ‘எம்.ஜி.ஆர்.மகன்’ மற்றும் சந்தோஷ் ஜெயகுமார் நடித்து அவரே இயக்கியுள்ள ‘இரண்டாம் குத்து’ ஆகிய மூன்று படங்கள் தீபாவளிக்கு வெளியாகின்றன.
வழக்கமாக சின்ன பட்ஜெட் படங்களுக்கு தீபாவளி நேரத்தில் தியேட்டர்கள் கிடைப்பதில்லை.இந்த முறை பெரிய பட்ஜெட் படங்கள் இல்லாததால், சின்ன பட்ஜெட் படங்கள் கூடுதல் தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது.
பெரும்பாலும் சின்ன பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆனால் பாதி இருக்கைகள் மட்டுமே நிரம்பும் என்ற நிலையில், 50 சதவீத இருக்கைகளை மட்டுமே நிரப்ப வேண்டும் என்ற நிபந்தனை, இந்த படங்களை பாதிக்காது.
விஜயின் ‘மாஸ்டர்’, தனுஷின் ‘ஜெகமே தந்திரம்’ கார்த்தியின் ‘சுல்தான்’ ஆகிய பெரிய படங்கள் தயாராக இருந்த போதிலும், அவை பொங்கல் பண்டிகையின் போது தான் வெளியாகின்றன.
– பா.பாரதி