டெல்லி:

கடனை திருப்பி செலுத்தாத கார்பரேட் வராக் கடனாளிகளின் பெயர்களை பட்டியலை பகிரங்கப்படுத்த வங்கிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஎஸ் தாகூர், நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசத் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் கடந்த அக்டோபர் மாதம் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.

வங்கிகளின் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று இந்த வழக்கு விசாரணை வந்தது. அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரிசர்வ் வங்கி பட்டியலை சீலிட்ட கவரில் வைத்து சமர்ப்பித்தது. இதற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

பட்டியலை பகிரங்கமாக வெளியிட்டால் கடன் வாங்கியவர்கள் தான் பாதிப்பார்கள். அவர்கள் வங்கியில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு திருப்பி செலுத்தாதவர்கள். பட்டியலை வெளியிடுவதால் மக்களுக்கு எப்படி பாதிப்பு ஏற்படும் என்றும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் கடந்த 3ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பு கூறினர். அதில், ரூ. 500 கோடிக்கு மேல் கடன் வாங்கிய 57 பேர் மட்டும் ரூ. 85 ஆயிரம் கோடி நிலுவை வைத்துள்ளனர். 500 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள் தொகையை கணக்கிட்டால் இது ஒரு லட்சம் கோடியை தாண்டும் என தெரிவித்துள்ளனர். நான்கு வாரத்திற்குள் ரூ. 500 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாதவர்கள் பெயர் விபரங்களை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று தீர்ப்பு கூறினர்.


இந்த வழக்கு விசாரணையின் போது இந்திய வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா குறித்தும் விவாதிக்கப்பட்டது.
1990ம் ஆண்டில் கடன் நிலுவை வழக்குகளில் எண்ணிக்கை 15 லட்சமாக இருந்தது. அப்போது ரூ. 6 ஆயிரம் கோடி வராக்கடனாக இருந்தது.

1993ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை 1.34 லட்சம் வழக்குகளை தீர்ப்பாயம் முடிவுக்கு கொண்டுவந்து 70 ஆயிரத்து 725 கோடிக்கு தீர்வு கண்டது. தற்போது ரூ. 5 லட்சம் கோடி வராக்கடன் தொடர்பாக 70 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளது.