சென்னை: டாஸ்மாக் கடைகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் கொண்டு வர பிறப்பிக்கப்பட்ட தேசிய ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட போதே உள்துறை அமைச்சகம் அளித்த தளர்வுகளின் அடிப்படையில் பல்வேறு மாநிலங்களில் மூடப்பட்ட மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.
தமிழகத்தை பொறுத்தவரை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், சென்னை மாநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால், சென்னை உயர் நீதிமன்றம், டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது.
கடும் சட்டப்போராட்டத்துக்கு பிறகு, தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனாலும் விற்பனை குறைவான அளவில் தான் இருக்கிறது. இந் நிலையில், திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் சாதாரண, நடுத்தர ரக மதுவகைகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்து விட்டதாகவும், உயர்தர மதுவகைகள் மட்டுமே இருப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிடங்குகளிலும் மதுபானங்கள் இருப்பு தீர்ந்து விட்டதாக தெரிகிறது. ஆகையால் திறக்கப்படாமல் இருக்கும் 1,600 கடைகளில் உள்ள குறைந்த விலை மதுபானங்களை, திறந்துள்ள கடைகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.