தமிழ்நாட்டில் ஒரு வாரத்தில் மதுக்கடைகள் திறப்பு?

மத்திய அரசு இந்த முறை அறிவித்துள்ள ஊரடங்கு, முந்தைய ஊரடங்கு போல் கடுமையாக இருக்கப்போவதில்லை.

நிறையக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

’’ அடுத்த ஊரடங்கில் எதை வேண்டுமானாலும் மூடுங்கள். ஆனால் மதுக்கடைகள் விஷயத்தில் மட்டும் நீக்கு போக்காக இருக்க வேண்டும்’’ என்று பல மாநிலங்கள் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டன.

பா.ஜ.க.ஆட்சியில் இருக்கும் கர்நாடக மாநில அரசு உள்ளிட்ட அரசுகள் இதில் முன்னணி வரிசையில் அடக்கம்.

அதை மனத்தில் வைத்தே , ஊரடங்கில் இருந்து மதுக்கடைகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

சிவப்பு மண்டலத்தில் மதுக்கடைகளைத்  திறக்க அனுமதி மறுத்துள்ள, மத்திய அரசு, மற்ற ஏரியாவில் மதுக்கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது. சரக்கு வாங்குவதற்கு சில சில்லறை நிபந்தனைகளையும்  விதித்துள்ளது.

பல மாநில அரசுகள், சிவப்பு மண்டலம் தவிர மற்ற மண்டலங்களில் மதுக்கடைகளைத் திறக்க முழு வீச்சில் ஏற்பாடு செய்து வருகின்றன.

தமிழ்நாடு?

இன்று இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

முதல் –அமைச்சர் தலைமையில் இன்று  நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ’’டாஸ்மாக்’’ மதுக்கடைகளைத் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

‘’ இன்னும் ஒரு வாரத்தில் தமிழ்நாட்டில் மதுக்கடைகள் திறக்கப்படும்’’ என்று மதுபான வணிகத்துடன் தொடர்புள்ள வி.ஐ.பி.ஒருவர் கோடிட்டுக் காட்டியுள்ளார், நமட்டு சிரிப்புடன்.

– ஏழுமலை வெங்கடேசன்