டெல்லி: மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக  அமலாக்கத்துறை  வழக்கைத் தொடர்ந்து,  நேரில்  ஆஜராக டெல்லி முதல்வர் அரவிந்த்  கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதன்படி வரும் 17ந்தேதி நேரில் ஆஜராக  சம்மன் அனுப்பி  உள்ளது.

டெல்லி மாநில மதுபான கொள்கை தொடர்பான மோசடி  வழக்கில், டெல்லி துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா உள்பட  ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் சிலரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. அவர்கள் 6 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர். இந்த ஊழல் வழக்கில் பல ஆம்ஆத்மி தலைவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில், டெல்லி முதல்வரிடமும் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்து ஜாமின் அனுப்பியது.

ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல், பாஜக மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.  சமீபத்தில், தன்னை பாஜகவில் இணையும்படி வலியுறுத்தியதாக குற்றம் சாட்டினார்.  ஆனால், அதை கண்டுகொள்ளதாக அமலாக்கத்துறை, அவரை விசாரணைக்கு ஆஜராக வலியுறுத்தி இதுவரை 5முறை சம்மன் அனுப்பி உள்ளது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார்.

இதையடுத்து,  அமலாக்கத் துறை சார்பில் டெல்லி ரோஸ் அவென்யு நீதிமன்றத்தில்,  டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, 5 முறை சம்மன் அனுப்பியும்  விசாரணைக்கு ஆஜராகவில்லை என  வழக்கு தொடரப்பட்டது.  இந்த வழக்கை விசாரித்த ரோஸ் அவென்யு நீதிமன்றம், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வரும் 17-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளது.