ர்தோய், உத்திரப் பிரதேசம்

பாஜக தலைவர் ஒருவர் கோவிலில் நடத்திய நிகழ்வில் உணவுப் பொட்டலங்களுக்குள் மது பாட்டில்கள் வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

உத்திரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியில் இருந்தவர் நரேஷ் அகர்வால்.  இவருடைய மகன் நிதின் அகர்வால் சட்டப்பேரவை உறுப்பினர் ஆவார்.   நரேஷ் தனது மகன் மற்றும் ஆதரவாளர்களுடன் கடந்த வருடம் மார்ச் மாதம் பாஜகவில் இணைந்தார்.    நிதின் அகர்வால் அவருடைய பாசி இனத்தவருக்காக ஒரு கலந்தாய்வு ஒன்றை நிகழ்த்தினார்.

இந்த கலந்தாய்வு ஹர்தோய் நகரில் உள்ள ஸ்ரவண் தேவி ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.   அப்போது அங்கு அனைவருக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டது.    இது குறித்து நிதின் மேடையில், “ஒவ்வொரு கிராமத் தலைவரும் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்படும் இடத்துக்கு சென்று உணவுப் பொட்டலங்களை பெற வேண்டும்.  அவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து வந்துள்ள மக்களுக்கு அதை அளிக்க வேண்டும்” என அறிவித்தார்.

அதை வாங்கி வந்த கிராம தலைவர்கள் தங்கள் கிராமத்தில் இருந்து வந்த அனைவருக்கு ஒரு பொட்டலம் வழங்கி உள்ளார்.   இந்த விழாவுக்கு வந்த சிறுவர்களுக்கும் இது வழங்கப்பட்டது.  அதை பிரித்து பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.   அந்த உணவுப் பொட்டலத்தில் உணவுடன் மது பாட்டிலும் இருந்துள்ளது.

இது குறித்து ஒரு கிராம சிறுவன், “நான் எனது தந்தையுடன் இந்த விழாவில் கலந்துக் கொள்ள வந்தேன்.  எனக்கும் என் தந்தைக்கும் தரப்பட்ட உணவுப் பொட்டலத்தில் உணவுடன் மது பாட்டிலும் இருந்தது.  இந்த பொட்டலம் நிதின் அகர்வால் வழங்கியது” என தெரிவித்துள்ளார்.

ஹர்தோய் தொகுதியின் பாஜக மக்களவை உறுப்பினர்அன்ஷுல் வர்மா நிதின் அகர்வாலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.  அவர், “நரேஷ் அகர்வால் தனது மகன் நிதின் அகர்வாலுடன் சமீபத்தில் கட்சியில் சேர்ந்தார்.   அவர் எனது தொகுதியில் உள்ள ஒரு கோவிலில் பசி இனத்தவரின் கலந்தாய்வை நடத்தினார்.   அது எனது தொகுதியின் துரதிருஷ்டம் என கூற வேண்டும்.

அனைவரும் சிறுவர்களுக்கு பேனா மற்றும் பென்சில்கள் வழங்குவார்கள்.  ஆனால் அகர்வால் குடும்பத்தினர் மது பாட்டிலை வழங்கி உள்ளனர்.   நான் இது குறித்து தலைமையிடம் புகார் அளிக்கப் போகிறேன்.   அத்துடன் இதை கட்சி நிர்வாகம் எப்படி அனுமதித்தது எனவும் கேட்க உள்ளேன்.   இவ்வளவு மது  பாட்டில்களை வழங்க எப்படி எக்சைஸ் துறை அனுமதி அளித்தது என்பது தெரியவில்லை.   பாஜக இது குறித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.