பாரிஸ்: ஃபிபா வழங்கும் உயரிய விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர் புகழ்பெற்ற கால்பந்து வீரர்களான அர்ஜெண்டினாவின் லயோனர் மெஸ்ஸியும், நெதர்லாந்தின் ஃபிரான்கி டி ஜாங்கும்.
‘த பெஸ்ட்’ எனப்படும் இந்த விருது சிறந்த ஆண் மற்றும் பெண் கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்படுவதாகும். இந்த விருது மொத்தம் 3 முறை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மெஸ்ஸி இதுவரை அந்த விருதைப் பெறவில்லை.
அவர் இரண்டுமுறை இரண்டாமிடத்தில் வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் டி ஜாங்க் இந்த விருதுக்கு இப்போதுதான் முதன்முறையாக பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறார்.
லா லிகா(La Liga), ஐரோப்பிய தங்கக் காலணி மற்றும் யூஇஎஃப்ஏ சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த கவுரவத்தைப் பெறுகிறார் மெஸ்ஸி. டி ஜாங்கைப் பொறுத்தவரை, ஏஎஃப்சி அஜாக்ஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்த கவுரவத்தைப் பெறுகிறார்.
இவர்கள் தவிர, இந்த விருதுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ, மேதிஜிஸ் டி லிஜிட், ஈடன் ஹசார்ட், ஹாரி கேன், சாடியோ மேனே, கிலியன் பாப்பே, முகமது சலா, விர்ஜில் வான் டிஜிக் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.