டெல்லி: பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளதாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் 5 மாநிலங்களின் 22 இடங்களில் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டு உள்பட நாடு முழுவதும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்யு நடவடிக்கையில் தேசிய புலனாய்வு அமைப்பு தீவிரமாக செயலாற்றி வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில், சென்னை, கோவை உள்பட பல பகுதிகளில் பல முறை சோதனை நடத்தி முக்கிய ஆவணங்கள் மற்றும் சிலரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம் உள்பட நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் 22 இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று சோதனையில் ஈடுபட்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி செய்வதாகக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில் இந்த தேடுதல் பணி நடைபெற்று வருவதகாவும், ஜம்மு காஷ்மீரில் மட்டும் பாரமுல்லா, குல்காம், ஆனந்த்நாக், புல்வாமா மாவட்டங்களில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஜம்மு-காஷ்மீரில் ஒன்பது இடங்களில் சோதனை நடப்பதாகவும், பீகாரில் எட்டு இடங்களிலும், உத்தரப்பிரதேசத்தில் இரண்டு இடங்களிலும், தமிழ்நாடு, கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்களில் தலா ஒரு இடத்தில் சோதனை நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.