ஆம்பூர்: வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த பொறியியல் கல்லூரி மாணவரை ஆம்பூரில் மத்திய உளவுத் துறை இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்தது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரம் நீலிக்கொல்லை மசூதி தெருவில் வசித்து வரும் மீர்ஹிதாயாத்அலி மகன் அனஸ் அலி (வயது 22) என்பவர் ஆற்காடு அருகே உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் வெளிநாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த சிலருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ரகசியமாக கவனித்து வந்த, மத்திய உளவுத்துறை (IB) இன்று அதிகாலை அவரை அதிரடியாக கைது செய்தது. அவரிடம் இருந்து, விலை உயர்ந்த 2 வெளிநாட்டு செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஐபி அதிகாரிகளுக்கு உதவியாக, வேலூர் ஐ.பி., திருச்சி ஐ.பி., திருப்பத்தூர் கியூ பிரான்ச் போலீஸார் களமிறங்கினர். கைது செய்யப்பட்ட அனஸ் அலியை ரகசிய இடத்துக்கு கூட்டிச்சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.