சென்னை

காராஷ்டிராவைப் போல் தமிழகத்திலும் கொரோனா  பரவல் அதிகரிக்கலாம் என சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் வேளையில் மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் மீண்டும் பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது.  அகில இந்திய அளவில் கொரோனா பரவலில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும் கேரளா இரண்டாம் இடத்திலும் உள்ளன.   இது கொரோனாவின் இரண்டாம் அலை என அச்சுறுத்தல் உள்ளது.

இதையொட்டி வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையத்திலேயே சோதனைகள் தொடங்கி உள்ளன.   நேற்று அரசு அமல்படுத்தி உள்ள கட்டுப்பாடுகளின் படி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கும் பயணிகள் அனைவருக்கும்  கொரோனா பரிசோதனைகள் நடைபெறுகிறது.

இன்று சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம், “தமிழகத்தில் பாதுகாப்பு நடைமுறைகளைச் சரிவர கடைப்பிடிக்க வேண்டும்.  இல்லாவிடில் மகாராஷ்டிராவைப் போல் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும். ஏற்கனவே ஐதராபாத்தில் உருமாறிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழக மக்கள் முகக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாளாமல் உள்ளது அதிருப்தியை அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.