மருதமலை முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக ‘லிஃப்ட்’ அமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.16 கோடி மதிப்பில் அன்னதான கூடம், பொருட்கள் பாதுகாப்பு அறை, இளைப்பாறு மண்டபங்கள் மற்றும் படிக்கட்டு சீரமைப்பு ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதில் ரூ. 5.2 கோடி மதிப்பீட்டில் மலைமீதுள்ள வாகன நிறுத்துமிடத்தில் இருந்து இரண்டு மின்தூக்கிகள் (‘லிஃப்ட்’) அமைக்கப்பட உள்ளது.
தற்போது வாகன நிறுத்துமிடத்தில் இருந்து பக்தர்கள் 150 படிகளில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் சிரமத்தைப் போக்கும் வகையில் வாகன நிறுத்துமிடத்தில் இருந்து 12 மீட்டர் உயரம் செல்லும் வகையில் முதலாவது மின்தூக்கி அமைக்கப்பட உள்ளது.
பின்னர் அங்கிருந்து 40 மீட்டர் தூரம் பக்கவாட்டு பாதையில் நடந்து சென்று இரண்டாவது மின் தூக்கி மூலம் மேலும் 8 மீட்டர் உயரம் சென்று கோயிலுக்கு செல்லும் வகையில் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஒரு நேரத்தில் சுமார் 20 பேர் வரை செல்லக்கூடிய வகையில் இந்த ‘லிஃப்ட்’கள் இருக்கும் என்றும் இந்தப் பணிகள் முடிந்து ஆகஸ்ட் மாதம் இது பயன்பாட்டுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.