குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தேர்தலில் போட்டியிட நிரந்தர தடை விதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்துள்ளது.
எம்எல்ஏ, எம்.பி. உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் மீது பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக் கோரி பாஜ செய்தித் தொடர்பாளர் அஸ்வனிகுமார் உபாத்யாய உச்சநீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்தார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும், நீதித்துறை மற்றும் நிர்வாக ரீதியான பொறுப்புகளை வகிப்பதற்கும் ஆயுள் முழுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பாக உரிய பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேர்தல் ஆணையம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில்…
தேர்தல் நடைமுறைகளில் திருத்தங்களை மேற்கொள்ள பல ஆலோசனைக் கூட்டங்களை மத்திய அரசுடன் தேர்தல் ஆணையம் நடத்தியுள்ளது. பல திருத்தங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவை அனைத்தும் அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும்.
அதுதொடர்பான உத்தரவைப் பிறப்பிப்பதும், சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதும் நாடாளுமன்றத்தின் கைகளில் உள்ளது.
இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக எந்த முடிவையும் எடுக்க முடியாது. குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்டவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம். அதேபோன்று மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விசாரிக்க பிரத்யேக நீதிமன்றம் அமைக்கலாம்.