ஜெய்ப்பூர்,

நாடு முழுவதும் மத்திய அரசின் மாடுகள் குறித்த சட்டதிருத்ததிற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில் ராஜஸ்தான் நீதிமன்றம், பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என்று கருத்து கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யக்கூடாது, மாட்டிறைச்சி விற்கக்கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை புகுத்தி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்  சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. மாட்டிறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்யப்படுவதை நாடு முழுக்க தடை செய்வதாகவும் அதில் தெரிவித்துள்ளது.

இந்த சட்டதிருத்தத்துக்கு நாடு முழுவதும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பல மாநிலங்கள் இந்த சட்டத்தை அமல்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்திலும் மத்தியஅரசின் அறிவிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், இதுகுறித்த வழக்கு ஒன்றில்  ராஜஸ்தான் நீதிமன்றம் வினோதமான கருத்தை கூறி உள்ளது.

அதில், பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை விதிக்க சட்ட இயற்றப்பட வேண்டும் என்றும், பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என்றும்  நீதிமன்றம் கருத்து கூறி உள்ளது.

நேற்று தமிழக ஐகோர்ட்டு  மதுரை கிளையில், மத்திய அரசின் உத்தரவு குறித்த வழக்கில், கருத்து கூறிய நீதிபதி,

மத்தியஅரசின் உத்தரவு 1960-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பிராணிகள் வதைத்தடுப்பு சட்டத்துக்கு எதிரானது. மத வழிபாட்டிற்கு பிராணிகளை கொல்ல அனுமதி அளிக்கும் சட்டப்பிரிவு 28-க்கு எதிரானது. மேலும், அரசியலமைப்பின் 25-வது பிரிவு வழங்கி உள்ள மத சுதந்திரத்திற்கும் எதிரானது.

இந்தநிலையில், அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள இந்த உரிமையை பிற சட்டங்களால் தடுக்க இயலாது.

உணவை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட உரிமை ஆகும். மக்களின் உணவுப்பழக்கத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இந்த தடை அமைந்துள்ளது என்று கூறி மத்திய அரசின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.