சென்னை: மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா முன்வடிவை சட்டப்பேரவையில்  மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்து சாமி தாக்கல் செய்தார். அதில், கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

  • கள்ளச்சாராயத்தை தயாரித்து விற்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல், ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம்
  • தமிழ்நாடு மதுவிலக்குச் சட்டம் – 1937ன்படி விதிகளை மீறி மது இறக்குமதி, ஏற்றுமதி செய்வதற்கு தண்டனை வழங்கப்படுகிறது
  • கள்ளச்சாராய விற்பனைக்காக பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்
  • மது அருந்தப் பயன்படுத்தப்படும் உரிமை இல்லாத இடங்கள் மூடி சீலிடப்படும்

தமிழ்நாடு சட்டப்பேரவை  மானிய கோரிக்கை கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடையும் நிலையில், கள்ளச்சாராயத்திற்கு முடிவு கட்டும் வகையில், கடுமையான சட்டப்பிரிவுகளுடன் மதுவிலக்கு திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து பேசிய அமைச்சர் முத்துசாமி,

விஷச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ₹10 லட்சம் ரூபாய் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னதாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி 69-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இச்சம்பவத்தில் மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுதொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, கடந்த 20ம் தேதி தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் கள்ளச்சாராய மரண விவகாரம் எதிரொலித்தது. கூட்டத்தொடர் முழுவதும் கருப்பு உடையில் வந்து அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட நிலையில், பாஜக, அதிமுக, தேமுதிக என அரசியல் கட்சிகள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதுடன், ஆளுநரை சந்தித்து, கள்ளச்சாராய மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கவும் வலியுறுத்தினர்.

இந்த நிலையில், கடுமையான சட்டப்பிரிவுகளுடன் தமிழ்நாடு மதுவிலக்கு திருத்த மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார்.

சட்டப்பேரவையில் காவல் மற்றும் தீயணைப்புத் துறை தொடர்பான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர், உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் பொருட்களை காய்ச்சுதல் போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாக இல்லை என்று கூறினார். இக்குற்றங்களை முற்றிலும் தடுப்பதற்கு முதற்கட்டமாக தமிழ்நாடு மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்றார். இதற்கிடையே, தமிழ்நாட்டில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவின் நடவடிக்கையால் கள்ளச் சாராய குற்றங்கள் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளதாக பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட காவல்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் மே மாதம் வரை கள்ளச்சாராயம் தொடர்பாக 4,968 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4,959 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் ஒன்றரை லட்சம் லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றி அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு திருத்த சட்ட மசோதாவில் உள்ளது என்ன?

கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் அதை தயாரிப்பது மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் வரை கடுங்காவல் தண்டனையோடு, ரூ.10 லட்சம் வரை தண்டனை தொகையை உயர்த்தி கடுமையான தண்டனைகளையும் விதிப்பதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதுள்ள 1937-ம் ஆண்டு தமிழ்நாடு மது விலக்கு சட்டத்தின்படி விதிகளை மீறி மதுவினை இறக்குமதி செய்வது, ஏற்றுமதி செய்வது, அருந்துவது போன்ற குற்றங்களுக்கு தண்டனைகள் வழங்கப்படுகிறது.

இதே போல மனித உயிருக்கு கேடு விளைவிக்க கூடிய கள்ளச்சாராயத்தை தயாரித்தல், உடைமையில் வைத்திருத்தல், விற்பனை செய்வது போன்று வழக்கமாக ஈடுபடும் குற்றங்களுக்கு வழங்கப்படக்கூடிய தண்டனைகள் போதுமானதாக இல்லை என்று கருதி இச்சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து கள்ளச்சாராயத்தின் அச்சுறுத்தலை முற்றிலுமாக ஒழிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது. எனவே தான் கள்ளச்சாராயத்துடன் கலக்கப்படக்கூடிய குடி தன்மை இழந்த எரிசாராயம், மெத்தனால் போன்ற தடை செய்யப்பட்ட மதுபானங்களால் விலை மதிப்பற்ற உயிர்களை இழக்க நேரிடுவதால் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தண்டனையை அதிகரிப்பது அவசியம் என்று அரசு கருதுகிறது.

இதற்காக கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்தில் சிறை தண்டனைக் கால அளவை அதிகரித்தும், தண்டனைத் தொகையின் அளவை கணிசமாக அதிகரித்தும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மதுவகை மதி மயக்கக்கூடிய மருந்தினை தயாரிக்கவும் கொண்டு செல்வதற்கும் வைத்திருப்பதற்கும் நுகர்வுக்கும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அந்த மதுவினை அருந்துவதால் மரணம் ஏற்பட்டால் ஆயுள் காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையோடு 10 லட்சம் ரூபாய் வரைக்கும் அபராத தண்டனை விதிக்க திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இதேபோல குற்றங்களை செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய அனைத்து அசையும் சொத்துக்களையும் பறிமுதல் செய்வதோடு மது அருந்துவதற்கு பயன்படுத்தப் படும் உரிமை இல்லாத இடங்களை மூடி முத்திரையிடவும், இந்த குற்றங்களை செய்யக்கூடிய நபர் எதிர்காலத்தில் இது போன்ற குற்றங்களை செய்வதில் இருந்து தடுப்பதற்கு கணிசமான தொகைக்கு பிணை முறிவினை நிறைவேற்றுவதற்கும் நிர்வாகத் துறை நடுவருக்கு அதிகாரம் அளிக்க வழிவகை செய்யப்பட்டு இருக்கிறது.

இதுபோன்று குற்றங்களை செய்து தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட ஒரு வரை அந்தப் பகுதியில் இருந்தே நீக்கம் செய்வதற்கு மதுவிலக்கு அதிகாரி அல்லது புலனாய்வு அதிகாரியால் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்வதற்கும் சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் வகையில் இதில் ஈடுபடக்கூடிய நபர்கள், பயன்படுத்தக்கூடிய பொருள்கள், இடம் என அனைத்தையும் வரை முறைப்படுத்தி அதற்கான தண்டனைகளையும், அபராத தொகைகளையும் அதிகரித்து அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்குவதற்கான வழிவகை செய்ய இந்த சட்ட திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.