சென்னை: சென்னையில்   நாய் உள்பட வளர்ப்பு பிராணிகள் வளர்ப்பவர்கள், அதற்கு கட்டாயம்  லைசென்ஸ் எடுக்க வேண்டும் என சென்னை  மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள மாநகராட்சி பூங்காவுக்குள் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியை,  இரண்ட வளர்ப்பு நாய்கள் சேர்ந்து கடித்ததில் பலத்த காயம் அடைந்தார். சிறுமியை காப்பாற்றச் சென்ற தாயையும் நாய்கள் கடித்தது. நாய்கள் கடித்ததால் தலையில் படுகாயங்களுடன் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த வந்த காவல்துறையினர்,   நாய்களை பூங்காவுக்குள் அழைத்து வந்த உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்த  நாய்களின் உரிமையாளர் புகழேந்தி  அவரது மகன், மகள்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.  இதையடுத்து, புகழேந்தியை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கிடையில்,  சிறுமியின் சிகிச்சை செலவை ஏற்பதாக நாய்களின் உரிமையாளர் புகழேந்தி உறுதி அளித்துள்ளார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணண் , சென்னை ஆயிரம் விளக்கில் நாய்கள் கடித்து சிறுமி படுகாயம் அடைந்த விவகாரத்தில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கனவே நாய்களின் உரிமையாளர் புகழேந்தி கைதான நிலையில், அவரது மனைவி தனலட்சுமி, மகன் வெங்கடேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிறுமியை கடித்த நாயானது,  மத்திய அரசு தடை செய்துள்ள நாய் வகையை  சேர்ந்தது என்றவர், மத்தியஅரசு  23 வகையான நாய்களை வளர்க்க தடை விதித்துள்ளது. அதில், ராட்வீலர் எனப்படும் நாயும் உண்டு. இந்த  ராட்வீலர் வகை நாய்களை இனப்பெருக்கம் செய்யக்கூடாது என்ற தடையும் உள்ளது. ஆனால், தடையை மீறி அந்த நாய் வளர்க்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவல் நிலைய ஜாமினில் விடுவிக்க உள்ள பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியை நாய் கடித்த விவகாரம், நாய்களின் உரிமையாளருக்கு இன்று காலை மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மாநகராட்சியை பொருத்தவரை எந்த வளர்ப்பு பிராணியாக இருந்தாலும் லைசென்ஸ் பெற வேண்டும். நாய்களுக்கு, அனைத்து தடுப்பூசிகளும் போடப்பட வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக கால்நடைத் துறையுடன் சேர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.