டில்லி:

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, புதுச்சேரி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடும் உரிமை தொடர்பான மத்திய அரசின் உத்தரவை சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதை எதிர்த்துமத்திய உள்துறை  சார்பில் உச்சநீதி மன்றத்தில்,  தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனு மீதான விசாரணையை தொடர்ந்து, மதுரை உயர்நீதி மன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய உச்சநீதி மன்றம் மறுத்து விட்டது.  இது தொடர்பாக விளக்கம் அளிக்க புதுச்சேரி எம்எல்ஏ லட்சுமி நாராயணனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

இதன் காரணமாக கிரண்பேடி மாநில அரசு நிர்வாகத்தில் தலையிடும் செயல் தடுக்கப்பட்டு உள்ளது.

முன்னாள் ஐபிஎஸ் ஆபிசரும், பாஜக ஆதரவாளருமான கிரண் பேடியை, புதுச்சேரி மாநிலத்துக்கு துணை ஆளுநராக மத்திய பாஜக அரசு நியமனம் செய்திருந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது.

அதையடுத்து, கிரண்பேடி மாநில அரசு நிர்வாக விசயத்தில் புகுந்து குளறுபடி செய்து, மாநில அரசுக்கு தொல்லை கொடுத்து வந்தார். அதற்கு ஏற்றார்போல, கிரண்பேடி புதுச்சேரி மாநில அரசின்  கோப்புகளை ஆய்வு செய்ய அனுமதி வழங்கி  கூடுதல் அதிகாரம் வழங்கிமத்திய உள்துறை அமைச்சகம், அவருக்கு  உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து கிரண்பேடியின் அத்துமீறிய செயல் காரணமாக மாநில நிர்வாகம் முடங்கும் சூழல் ஏற்பட்டது. கிரண்பேடியின் அடாவடி  செயலை கண்டித்து மாநில முதல்வர் நாராயண சாமியில், கவர்னர் மாளிகை முன்பு சாலையில் அமர்ந்த  மாபெரும் தொடர் தர்ணா போராட்டம் நடத்தினார். 5 நாட்களுக்கும் மேலாக நடைபெற்ற இந்த போராட்டம் தேசிய அளவில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதற்கிடையில், புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன் , சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணையை தொடர்ந்து, கடந்த  ஏப்ரல் 30ம் தேதி, மத்திய உள்துறை அமைச்சகம் கிரண்பேடிக்கு வழங்கிய கூடுதல் அதிகாரத்தை  ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும் மாநில அரசின் நடவடிக்கைகளில் அன்றாடம் துணைநிலை ஆளுநர் தலையிடக் கூடாது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிக அதிகாரம் உள்ளது என்றும் கூறி கிரண்பேடி மற்றும் பாஜக மத்திய அரசின் மூக்கை உடைத்தது.

ஆனால், அதற்கும் அடங்காத கிரண்பேடி, மத்தியஅரசு மூலம் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய வலியுறுத்தி வந்தார். அதைத்தொடர்ந்து,மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க கோரியது. ஆனால், அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று அறிவித்த உச்சநீதி மன்றம், வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்தது.

விசாரணையை தொடர்ந்து, மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்த உச்சநீதி மன்றம், கிரண் பேடிக்கு வழங்கப்பட்ட உள்துறை அமைச்சக உத்தரவை ரத்து செய்து மதுரை உயர்நீதி மன்றம் அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி வழக்கை ஒத்தி வைத்தது.

மேலும் வழக்கு தொடர்பாக பதில் அளிக்க புதுச்சேரி எம்எல்ஏ லட்சுமி நாராயணனுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டது.

இதன் காரணமாக கிரண்பேடி மாநில அரசின் நிர்வாகத்தில் தலையிடுவது தடுக்கப்பட்டு உள்ளது.