டில்லி:

அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக உச்சநீதி மன்றம் அமைத்த மத்தியஸ்தர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையை தொடர்ந்து, மத்தியஸ்தர்கள் குழுவினருக்கு ஆகஸ்டு 15ந்தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளது உச்சநீதி மன்றம்‘. இது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

அயோத்தி விவகாரத்தை வைத்து அரசியல் செய்து வந்த பாஜக, கடைசி 2 கட்ட தேர்தலிலாவது, உச்சநீதி மன்ற தீர்ப்பை வைத்து லாபம் அடையலாம் என எதிர்பார்த்திருந்த நிலையில், உச்சநீதி மன்றத்தின் இன்றைய உத்தரவு பாஜகவுக்கு மேலும் ஒரு பின்னடைவை உருவாக்கி உள்ளது. இதன் காரணமாக பாஜக தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யோத்தி சர்ச்சைக்குரிய  நிலத்திற்கு  உரிமை கோரி தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், மத்தியஸ்தர்கள் குழு அமைத்தது. இந்த குழுவினர் சம்பந்தபட்ட இடத்துக்கு சென்று, விசாரணை நடத்தி  8 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

முன்னாள் உச்சநீதி மன்ற நீதிபதி எம்.எம்.ஐ. கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர்,  மற்றும் மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் மத்தியஸ்தர்கள் குழுவினர்களாக நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு 8 வாரங்கள் அவகாசம் கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து விசாரணை குழுவினர்  கடந்த மார்ச் 12ந்தேதி அயோத்திக்கு சென்று விசாரணையை தொடங்கினார். அவர்களுக்கான அவகாசம் முடிவடைந்த நிலையில் இன்று உச்சநீதி மன்றத்தில் நடைபெற்ற அயோத்தி வழக்கில், விசாரணை முடிவின் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அயோத்தி வழக்கின் விசாரணை  நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில்,  நீதிபதிகள் பாப்டே, சந்திரசூட், அசோக் பூஷன், அப்துல் நாசர் கொண்ட 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தி வருகிறது. இன்றைய விசாரணையின்போது,  மத்தியஸ்தர்கள் குழு தாக்கல் செய்த இடைக்கால அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், விசாரணையில் திருப்தி அடைவதாக அறிவித்தனர். இந்த விவகாரத்தில்  “முன்னேற்றம் என்னவென்பதை நாங்கள் உங்களுக்கு சொல்லப்போவதில்லை, அது ரகசியம்” என்றும் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து, தங்களுக்கு மேலும் கால அவகாசம் அளித்தால், அயோத்தி சர்ச்சையை சுமூகமாக முடிக்கலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்து, கால அவகாசத்தை  நீட்டிக்க கோரிக்கை விடுத்தது.

அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்ற அமர்வு, மத்தியஸ்தர் குழுவினருக்கு ஆக.15ம் தேதி வரை அவகாசம் அளித்தது உத்தரவிட்டது.