சென்னை: அனைத்துத்துறை செயலாளர்களுக்கு அனுப்பப்பட்ட கடிதம் விவாதப்பொருளாக மாறி இருப்பது சரியல்ல , திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து தகவல்களை திரட்ட அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமான நடைமுறைதான் என தலைமை செயலாளர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.
அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமை செயலாளர் வெ.இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயின்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும்’ என்று அந்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தகடித விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆளுநரிடம் திமுக அரசு பணிந்து விட்டது என்று ஒரு தரப்பும், மாநில சுயாட்சியை திமுக விட்டுககொடுக்காது என்று மற்றொரு தரப்பும் சமுக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில், இது தேவையற்ற விவாதம் என கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தலைமைச்செயலாளர் இறையன்பு.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அலுவல் ரீதியாக துறையின் செயலாளர்களுக்கு நான் அனுப்பிய ஒரு கடிதம் அவசியமற்ற ஒரு விவாதப் பொருளாக மாறி இருப்பதாக அறிகிறேன். தமிழ்நாட்டுக்கு ஆளுநர் அவர்கள் புதிதாக பொறுப்பேற்றுள்ளார்கள் அவர்களுக்கு தமிழக அரசின் பல்வேறு சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் வகையில் அதற்கான தரவுகளைத் திரட்டி வைத்துக் கொள்ளுமாறு அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் அலுவல் ரீதியான ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளேன். திட்டங்கள், செயலாக்கங்கள் குறித்து இதுபோல் தகவல்களை திரட்டி வைத்துக் கொள்ள அறிவுறுத்துவது நிர்வாகத்தில் வழக்கமானது தான்.
அதனை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக ஆக்குவது சரியானது அல்ல. அரசின் நிர்வாகச் செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைகளில் ஒன்று தான் என்பது தெரியும் என தெரிவித்துள்ளார்.