சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், அதை எதிர்கொள்ள தேவயைன  முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை உடனே தொடங்க ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின்  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக காணொளி காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை மேற்கொண்டார். இதில், துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகளும் முதலமைச்சருடனான ஆலோசனையில் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஸ்டாலின்,  வடகிழக்கு பருவமழையையொட்டி பாதிப்புக்குள்ளாகும் அனைத்து பகுதிகளையும் ஆய்வுசெய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் என அறிவுறுத்தி உள்ளார்.  பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியம் பொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் பயிர்கள் மழைநீரில் மூழ்குவதை தடுக்க வடிகால்களை தூர்வார வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைத்து துறையினரும் இணைந்து எடுக்க வேண்டும் என்றும், உயிர்காக்கும் மருந்துகள், உபகரணங்கள், பாம்பு கடிக்கான மருந்து, ஆக்சிஜன் உருளைகள் உள்ளிட்டவை தயாராக வைத்திருக்க வேண்டும்.

நீர்நிலைகளில் இருந்து உபரிநீரை திறக்கும்போது முன்னதாகவே அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.  முழுகொள்ளவை எட்டியுள்ள அணைகள், ஏரிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். உடைப்பு ஏற்படாமல் இருக்க அவ்வப்போது உபரி நீரை வெளியேற்றி அணை பாதுகாப்பை உறுதி செய்யுமாறும், வெள்ள அபாயம் ஏற்படுவதை தவிர்க்க ஆட்சியர்கள் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இயற்கையை முறையாக கையாண்டால் அது கொடை, கையாளவில்லை எனில் அது பேரிடராக மாறும். இயற்கையை முறையாக எதிர்கொள்ள தவறும்போது அது தான் யார் என்பதை சுட்டிக்காட்டி விட்டு செல்கிறது. எனவே, இயற்கையை கொடையாக எதிர்கொள்ள போகிறோமோ, பேரிடராக மாற்ற போகிறோமோ என்பது நம் கையில் தான் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.