துறையூர்: கரூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், பள்ளி மாணவர்களின் விமர்சனத்தால் மன உளைச்சலுக்கு ஆளான கணித ஆசிரியர் உருகமான கடிதத்தை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் பாலியல் தொல்லையால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதே பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் எழுதி வைத்ததாக கூறப்படும் டைரி குறிப்பு போலீசாரின் கையில் சிக்கியுள்ளது. இது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கரூர் பள்ளி மாணவியின் தற்கொலை குறித்து காவல்துறையினர், அந்த மாணவி படித்த தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் என அனைவரும் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை குறித்து மாணவர்களும் அரசல் புரசலாக சில ஆசிரியர்கள் மீது சந்தேகம் கொண்டு விமர்சித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், அந்த பள்ளியில் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்து வந்த சரவணன் என்பவர் திடீரென நேற்றிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், சரவணன் எழுதியதாக கூறப்படும் டைரி குறிப்பு சிக்கியுள்ளது.
அந்த குறிப்பில், மாணவியின் தற்கொலைக்கு தாம் தான் காரணம் என மற்ற மாணவர்கள் தன்னை தவறாக நினைப்பதாகவும், அது அவமானமாக இருப்பதால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கோபத்தில் சில சமயங்களில் மாணவர்களிடம் கடுமையாக நடந்து கொண்டிருப்பதாகவும், மற்றபடி எந்த தவறும் செய்யவில்லை எனவும் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. குடும்பத்தினரிடமும், மாணவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் சரவணன் அந்த கடிதத்தில் தெரிவித்திருக்கிறார்.
இந்த டைரி குறிப்பை கைப்பற்றியுள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி தற்கொலைக்கும், சரவணனுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?, சரவணனை மாணவர்கள் தவறாக பேசியதாக கூறப்படுவதற்கு காரணம் என்ன? என்பன குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.