சென்னை: சுற்றுலா, பண்பாடு, அறநிலையத்துறை சார்பில் ரூ.6.57 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்தது, உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ‘தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022’ என்ற நிகழ்ச்சியை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு ஓட்டலில் 4 கோடியே 17 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி மற்றும் கூட்டரங்கம், கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகரில் 60 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சுற்றுலா அலுவலகக் கட்டடம் மற்றும் மதுரை, கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள தர்காவில் 1 கோடியே 80 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சுற்றுலாத்துறையானது வேலைவாய்ப்புகளை அளித்தல், அன்னியச் செலவானியினை ஈட்டுதல் ஆகியவற்றில் முக்கிய பங்காற்றுகிறது. இந்தியா வில் சுற்றுலா தலங்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாகும். தமிழ்நாட்டில் பல்வகையான சுற்றுலா தலங்கள், பிரம்மாண்டமான திருக்கோயில்கள், இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதிகள், அழகிய கடற்கரைகள் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்கள் பலதரப்பட்ட சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்துள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் தமிழ்நாடு இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாத்துறையை மேம்படுத்திட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வாயிலாக தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
காவிரிக் கரையில் அமைந்துள்ள அழகிய நகரமான திருச்சிராப்பள்ளி, பல்வேறு வரலாற்று பெருமைகளும், இயற்கை வளமும் ஒருங்கே அமைந்த மாவட்டமாகும். மலைகோட்டையில் அமைந்துள்ள உச்சிப் பிள்ளையார் கோயில், 108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும், முக்கியமானதாக வும் கருதப்படும் ஶ்ரீரங்கம், பஞ்சபூத நீர்த்தலமாகிய திருவானைக்காவலும், புகழ்பெற்ற சக்தி பீடமாகிய சமயபுரமும், இயற்கை எழில் கொஞ்சும் பச்சமலை, புளியஞ்சோலை, முக்கொம்பு போன்ற சுற்றுலா தலங்கள் இம்மாவட்டத்தில் உள்ளன. ஆண்டு தோறும் திருச்சிராப்பள்ளிக்கு வருகைபுரியும் இலட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு அதிக வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில், தமிழ்நாடு ஒட்டலில் 4 கோடியே 17இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் சுமார் 19,238 சதுரஅடி பரப்பில் தங்கும் விடுதி மற்றும் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், தொழில் கூட்டங்கள் நடத்துவதற்கு 110 நபர் இருக்கை வசதி கொண்ட கூட்ட அரங்கம் கட்டப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வரலாற்று நினைவிடங்கள், சிறப்புமிக்க கட்டடங்கள், பழமையான கோயில்கள், சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில், அண்ணாமலை பல்கலைக்கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், போர்ச்சுகீசியர்கள் வாணிபம் நடத்திய பரங்கிப்பேட்டை, சமரச சன்மார்க நெறிகண்ட வள்ளலார் பிறந்த வடலூர் போன்ற இடங்களுக்கு வருகைபுரியும் சுற்றுலாப் பயணிகளுக்கு கடலூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவல்களை வழங்குவதற்கும், கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை ஒருங்கிணைப்பதற்கும் சிதம்பரம் நகரில் 60 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய சுற்றுலா அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இதன்மூலம், கடலூர் மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகள் இவ்வலுவலத்தின் வாயிலாக சிறப்பாக மேற்கொள்ளப்படும்.
மதுரை மாநகர், கோரிப்பாளையத்தில் அமைந்துள்ள ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன் அவுலியா தர்கா மற்றும் மஸ்ஜித் வக்ஃப் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனிதத் தலமாகும். இங்கு நடைபெறும் கந்தூரி திருவிழாவிற்கு அதிகளவில் உள்ளூர் மக்களும், சுற்றுலாப் பயணிகளும் வருகை புரிகின்றனர். இத்தர்காவிற்கு வருகைபுரியும் புனித யாத்திரிகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை ஏற்படுத்தித்தரும் வகையில் 1 கோடியே 80 இலட்சத்து 21 ஆயிரம் ரூபாய் செலவில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கான ஓய்வுக்கூடங்கள், பொருட்கள் வைப்பறை, ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பறைகள் ஆகிய கூடுதல் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில், தலைமைச் செயலகத்திலிருந்து மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தர மோகன், இ.ஆ.ப., சுற்றுலாத்துறை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், திருச்சிராப்பள்ளியிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் திரு. மு. அன்பழகன், திருச்சிராப் பள்ளி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. மா. பிரதீப் குமார், இ.ஆ.ப., திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஆர். வைத்தியநாதன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு அமைச்சர் மதிவேந்தன் Discover Tamil Nadu-2022 என்ற நிகழ்ச்சியில் தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களிலுள்ள சுற்றுலா தலங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரசித்திபெற்ற 10 சமூக ஊடகவியலாளர்களின் சுற்றுலா வாகனத்தை (Influencers on Wheels) கொடியசைத்து தொடங்கி வைத்தார். இன்று (27.09.2022) உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அவர்கள் ‘தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022 (Discover Tamil Nadu-2022)’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து, தமிழகத்தின் வடமேற்கு மாவட்டங்களிலுள்ள சுற்றுலா தலங்களில் பயணம் மேற்கொள்ளவுள்ள பிரசித்திபெற்ற 10 சமூக ஊடகவியலாளர்களுக்கு சுற்றுலா விளம்பர பொருட்கள் மற்றும் சுற்றுலா கையேடுகளை வழங்கி, சமூக ஊடகவியலாளர்கள் செல்லக்கூடிய சுற்றுலா வாகனத்தை (Influencers on Wheels) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மா.மதிவேந்தன் அவர்கள் தெரிவித்ததாவது: முதலமைச்சர் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக அதிகம் முக்கியத்துவம் அளித்து புதுமையான பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். அதனை செயல்படுத்தும் விதமாக சாகச சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, உணவுடன் கூடிய உறைவிடம் மற்றும் கேரவன் சுற்றுலா போன்ற திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகள் இன்று வெளியிடப்படவுள்ளன. மேலும், தமிழ்நாடு சுற்றுலாத் துறை மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையினை அதிகரிக்கும் வகையில் சமூக ஊடகங்களில் பிரபலமானவர்களின் சமூக வலைதளங்களை அதிக அளவில் மக்கள் பார்வையிடுகின்றனர்.
அதன் மூலம் அவர்கள் கூறும் கருத்துக்கள் சமூக ஊடகம் வாயிலாக அதிக நபர்களுக்கு உடனடியாக சென்றடைகின்றது. அவ்வாறு உள்ளவர்களில் பத்து நபர்களை தேர்ந்தெடுத்து, அவர்களை சுற்றுலாத்துறை ஊக்குவித்து தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் அதிகம் பிரபலமடையாத சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு தமிழக சுற்றுலாத் தலங்களின் சிறப்புகள் குறித்து அறிந்து கொள்வதன் மூலம் அவர்கள் பார்வையிட்ட இடங்களின் விவரங்களை தங்களது சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலப்படுத்துகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 வலைதள பிரபலங்கள் ஒவ்வொருவருக்கும் சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இவர்களது சமூக வலைதளங்களை பின்தொடர்பவர்களாக உள்ளனர்.
கடந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று (27-09-2021) சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய கட்டடங்கள் மற்றும் மாளிகைகளை நினைவுகூறும் வகையில், சுற்றுலாப்பயணிகள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுடன், பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். அந்த வகையில் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினமான இன்று (27.09.2022) சென்னை கலைவாணர் அரங்கத்தில் ‘தமிழகத்தை கண்டு மகிழ்வோம்-2022 (Discover Tamil Nadu-2022)’ நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த (மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, கேரளா, உத்தரகாண்ட், டில்லி, ஒடியா, கர்நாடகா, பஞ்சாப், தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா) சமூக ஊடகங்களில் பிரபலமான 10 சமூக ஊடகவியலாளர்கள் ஜவ்வாது மலை, ஒகேனக்கல், கொல்லிமலை, பூச்சமருதூர் (கோவை), சேத்துமடை, வால்பாறை, கோயமுத்தூர் ஆகிய பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
இதன்மூலம் இச்சுற்றுலாத்தலங்கள் பிரபலமடைந்து அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருகைதர வழிவகுக்கும். இவ்வாறு மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்தரமோகன் B இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் மேலாண்மை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலாத்துறை இணை இயக்குநர் திரு.ப.புஷ்பராஜ், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக பொது மேலாளர் திருமதி. லி. பாரதி தேவி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.