சென்னை: பாஜக ஒரு தலித் விரோத கட்சி என்பதை மக்களுக்கு உணர்த்துவோம் என்று தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கடுமையாக தாக்கப்பட்டதால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பலனிக்காமல் மரணமடைந்தார்.
படுகொலை செய்யப்பட்ட அந்த பெண்ணின் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற சென்ற தலைவர் திரு ராகுல்காந்தி மற்றும் திருமதி பிரியங்கா காந்தி ஆகியோரை உ.பி. காவல்துறையினர் வழியிலேயே இடைமறித்து, காட்டுமிரண்டித்தனமாக அவர்களை கையாண்டதோடு மட்டுமல்லாமல், தலைவர் ராகுல் காந்தி அவர்களை தாக்கி, அவரை கீழே தள்ளிய சம்பவம் நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் தூண்டுதலின் பேரில் செயல்பட்ட உ.பி. காவல்துறையினரின் செயல்பாடு ஜனநாயக விரோதமும், சட்ட விரோதமும், அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். உத்திரபிரதேச மாநிலம், ஹத்ராஸ் கிராமத்தை சேர்ந்த தலித் பெண்ணின் தாயாரை சந்தித்து ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் ஆறுதல் கூறிய காட்சிகள் நாட்டுமக்களின் நெஞ்சை உலுக்குவதாக இருந்தது.
பிரியங்கா காந்தியை பெண்ணின் தாயார் கட்டி தழுவி கதறி அழுதார். “எங்களுக்கு எங்கே நீதி கிடைக்க போகிறது, என் மகளை பலாத்காரத்திற்கு பலியாக்கிவிட்டேன்” என்று கூறியபோது “உங்கள் மகளுக்கு நீதி கிடைக்க கடைசிவரை போராடுவோம்” என்று ராகுலும், பிரியங்காவும் கூறியது அவர்களுக்கு ஆறுதலாக இருந்தது.
ஒடுக்கப்பட்ட மக்கள் எப்போது பாதிக்கப்படுகிறார்களோ, அவர்களுக்காக குரல்கொடுக்க, ஆறுதல் கூற வருகிற பாரம்பரியத்தில் வந்தவர்கள் என்பதை ராகுலும், பிரியங்காவும் நிரூபித்திருக்கிறார்கள். எனவே, பாலியல் பலாத்காரத்திற்கு பலியான அப்பாவி பெண்ணிற்கு நீதி கேட்கிற போராட்டம் வெற்றிபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்படி மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட அனைத்து காங்கிரஸ் கட்சியினரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இதன்மூலம் பாஜக ஒரு தலித் விரோத கட்சி என்பதை நாட்டு மக்களுக்கு உணர்த்துவோம், பாதிக்கப்பட்டு தலித் பெண்ணிற்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.