சென்னை

ந்தியாவுக்கு வந்துள்ள அன்னிய முதலீடுகளில் தமிழ்நாட்டுக்கு 0.8% மட்டுமே கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருவதாக தமிழக அரசின் அமைச்சகம் அறிவித்தது.    தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் சம்பத் கடந்த வருடம் நவம்பர் மாதம் தமிழ்நாட்டுக்கு அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வந்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

அவர், ”ஃபோர்ட் மற்றும் ஹுண்டாய் ஆகிய வாகன நிறுவனங்கள் தங்களின் முதலீட்டை அதிகரித்துள்ளன.  அத்துடன் சுவீடனின் ஃபர்னிச்சர் கம்பெனியான இகியாவும் விரைவில் தனது தொழிற்சாலையை தமிழ்நாட்டில் தொடங்க உள்ளது”  என அறிவித்திருந்தார்.

தற்போது சென்ற வருடத்திற்கான அன்னிய முதலீட்டுப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.   அதில் மொத்தம் வந்த ரூ. 3.95 லட்சம் கோடி முதலீட்டில் தமிழ்நாட்டுக்கு ரூ.3.131 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாக குறிப்பிடப் பட்டுள்ளது.  அதாவது மொத்த முதலீட்டில் தமிழ்நாட்டில் 0.8% மட்டுமே தமிழ்நாட்டில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு முதலே தமிழ்நாட்டில் அன்னிய முதலீடு வரத்து குறையத் தொடங்கி உள்ளது.   அதே வேளையில்  கர்னாடகா,  ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் அன்னிய முதலீடு அதிகரித்து வருகிறது.   மொத்தம் தமிழ்நாட்டுக்கு சென்ற வருடம் 62 முதலீடுகள் மட்டுமே கிடைத்துள்ளது.   அதே நேரத்தில் கர்னாடகாவுக்கு 194 முதலீடுகளாக ரூ.1.52 லட்சம் கோடி வந்துள்ளது.

தமிழக தொழில் துறை இயக்குனர் ரவிச்சந்திரன், “முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் தமிழ் நாட்டில் ஒரு அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் போனது இந்த முதலீடு குறைவுக்கு முக்கிய காரணம் ஆகும்.  மேலும் அரசின் தொழில் கொள்கையும் இந்த குறைவுக்கு மற்றொரு காரணம் ஆகும்.   இந்த நிலைமை மாறினால் தமிழகத்தில் அன்னிய முதலீடு அதிகரிக்க வாய்ப்புள்ளது”  என தெரிவித்துள்ளார்.

இது குறித்து நிதித்துறை ஆர்வலரும் திமுக உறுப்பினருமான தியாகராஜன், “தமிழ்நாடு போன்ற ஒரு தொழில்துறையில் முன்னேற்றம் அடைந்த மாநிலத்துக்கு குறைவான தொழில் வளர்ச்சி உள்ளது அதிரிச்சி அளிக்கிறது.    தற்போதைய அரசினால் அன்னிய முதலீடுகளைக் மாநிலத்த்துக்கு கொண்டு வர முடியவில்லை என்பது தற்போது தெளிவாகி உள்ளது.  உடனடியாக அரசு தனது தொழில் கொள்கைகளை மாற்றிக் கொண்டு அன்னிய முதலீடுகளை அதிகரிக்க ஆவன செய்ய வேண்டும்”  எனக் கூறி உள்ளார்.