கடலூர்: தமிழகஅரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் நிவர் புயலால ஏற்பட்ட பாதிப்பு குறைந்துள்ளதாக  கடலூரில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

கடந்த 21-ந் தேதி வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று நிவர் புயலாக மாறியதுடன், நேற்று அதி தீவிர புயலாக மாறி  புதுச்சேரிக்கு வடக்கே மரக்காணம் அருகே நேற்று (நவம்பர் 25) நள்ளிரவு 11.30 மணி அளவில் கரையை கடக்க தொடங்கி இன்று அதிகாலை ( நவம்பர் 26 ) 2.30 மணிக்கு முழுவதுமாக கரையைக் கடந்தது.  புயல் கரையை கடக்கும்போது 140 கி.மீ வேகத்தில் காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மாநில அரசுகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் உயிர்ச்சேதம் உள்பட சேதங்கள் தவிர்க்கப்பட்டது.

இந்த நிலையில், புயல் கரையை கடந்த பகுதியான கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று காலை அங்கு விரைந்தார். பிற்பகல் அங்கு சென்றடைந்தவர், அங்கு புயல் சேதம் மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தார்.  கடலூர் மாவட்டத்தின்  ரெட்டிசாவடி குமாரமங்கலத்தில் விளைநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்ட பழனிசாமியிடம், விவசாயிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.  தொடர்ந்து கடலூர் துறைமுகப் பகுதிக்கு வந்து,  சேதமடைந்த படகுகளை பார்வையிட்டார். மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது,   தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நிவர் புயலால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. புயலால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைக்க நிவாரண முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், 13 லட்சம் மக்கள் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது, 2299 முகாம்களில் 2.30 லட்சம் பேர் தங்கியுள்ளனர். கடலூரில் 441 முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசித்த 52, 226 பேர் தங்க வைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் 77 மின்கம்பங்கள் பாதிக்கப்பட்டன. அவற்றை சரி செய்து மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 321 மரங்கள் சாய்ந்தன. அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு சீர் செய்யப்பட்டுள்ளது. 1,617 ஹெக்டேர் நெற்பயிர்கள், 315 ஹெக்டேர் வேளாண் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.

35 ஏக்கர் வாழை சேதமடைந்துள்ளது. 8 ஹெக்டேரில் மரவள்ளிக்கிழங்கு தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தற்போது வரை கிடைத்த தகவல். மாவட்ட நிர்வாகம் முழுமையாக கணக்கெடுத்த பின்னரே பாதிப்பு விவரம் தெரியவரும்.பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டுதொகை வழங்கப்படும். காப்பீடு செய்யாத விவசாயிகளுக்கு பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். நிவர் புயலில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் காக்கப்பட்டுள்ளது.
புயலில் இரவு பகல் பார்க்காமல் அமைச்சர், கலெக்டர், எஸ்பி, எம்எல்ஏ உயர் அதிகாரிகள், வேளாண்மை முதன்மை செயலர் ஒருங்கிணைந்து பின்பற்றிய காரணத்தினால், புயலில் இருந்து மக்கள் காக்கப்பட்டுள்ளனர். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், நீர்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை மாவட்ட நிர்வாகம் அகற்றப்படும்.நிவர் புயல் எப்படி எதிர்கொள்வது எப்படி பாதுகாப்பது எடுத்த நடவடிக்கை சரியான முறையில் நடவடிக்கை எடுத்தோம். இதனால் உயிர்சேதம், பொருட்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் அனைத்து இடத்திற்கு சென்ற பாதிப்பு ஏற்படாதவாறு பார்த்து கொண்டனர். வருவாய் துறை அமைச்சர், சென்னையில் கட்டுப்பாட்டு அறையில் நாள் முழுவதும் தங்கியிருந்து, மாவட்ட நிர்வாகத்துடன் பேசி உடனுக்குடன் நடவடிக்கை எடுத்ததார்.

புயலால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. புயல் கடந்து சென்றதும், மின்னிணைப்பு செலுத்தினால் பிரச்சனை இல்லை என்ற பட்சத்திலேயே, மின்சார இணைப்பு கொடுக்கப்படும். மக்களின் உயிர் முக்கியம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று மின்னிணைப்பை கொடுக்க முடியாது.  மின்சாரம் மிகவும் ஆபத்தானது. மின்சாரம் விவகாரத்தில் அரசு அலட்சியத்துடன் இருக்காது. மக்களின் உயிரே எங்களுக்கு முக்கியம். உயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்திலேயே, மின்னிணைப்பு வழங்கப்படும். புயலில் இருந்து மக்களை காப்பாற்றுவதே அரசின் கடமை ”  சேத விபரங்கள் கணக்கிட்ட பின்னர், மத்திய அரசுக்கு தேவையான நிதி குறித்து கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.