சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்கும் வகையில் அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளை தனதாக்கி சாதனை படைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலை முதலே நடைபெற்று வருகிறது. இதில் திமுக கூட்டணி 157 இடங்களிலும், அதிமுக கூட்டணி 77 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்த திமுக தற்போது ஆளும்கட்சியாக, மாறியுள்ளது. முதன்முதலாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார். இது திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் திமுகவே அனைத்து தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது. அண்ணாநகர் தொகுதியில் திமுகவின் எம்.கே.மோகன். சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் ஜே.ஜே.எபினேசர், எழும்பூர் தொகுதியில் ஐ.பரந்தாமன், கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மயிலாப்பூர் தொகுதியில் த.வேலு, பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி.சேகர், ராயபுரம் தொகுதியில் ‘ஐ ட்ரீம்’ மூர்த்தி , சைதாப்பேட்டை தொகுதியில் மா.சுப்பிரமணியன், திருவிக நகர் தொகுதியில் தாயகம் கவி, ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலன், தி.நகரில் ஜெ.கருணாநிதி, வில்லிவாக்கம் தொகுதியில் வெற்றியழகன், விருகம்பாக்கம் தொகுதியில் பிரபாகரராஜா, வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா, துறைமுகம் தொகுதியில் திமுக வேட்பாளர் சேகர்பாபு ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.
இவர்களின் வெற்றியும் உறுதியாகி வரும் நிலையில், சென்னை முழுமையாக திமுகவின் கோட்டையாக மாறி உள்ளது.